‘முக்கிய முகம் டு தலைவர்’ – ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் ஷேக் நைம் காசிம் – யார் இவர்?!

32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹஸன் நஸ்ரல்லா, கடந்த மாதம் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து, தற்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் ஓராண்டு தாண்டியும் சென்றுகொண்டிருக்கிறது. இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு உதவ, லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு வர, இஸ்ரேலின் தாக்குதல் லெபனான் பக்கமும் திரும்பியது. ஹிஸ்புல்லா – லெபனானுக்கு இடையே ஆன போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில், இஸ்ரேல் ஹிஸ்புல்லா தலைவர் தொடங்கி தளபதிகள் வரை குறி வைத்து தாக்கி அழித்தது.

ஷேக் நைம் காசிம் தேர்வு! – யார் இவர்?!

இந்த நிலையில் தான், தற்போது, ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நைம் காசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச்செயலாளராக இருந்துள்ளார். மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த அமைப்பு சார்பாக சர்வதேச மீடியாக்களில் பேச வேண்டுமானால், இவர் தான் அந்த நேர்காணல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய முகமாக தோன்றுவார். முதன்முதலாக இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிட்டது தொடங்கி இப்போதைய தேர்தல்கள் வரை, இந்த அமைப்பின் தேர்தல் ஒருகிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமானவர்கள் ஒவ்வொருவராக அழிக்கப்பட்ட பின்னர், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் முடிந்துவிடுமோ என்று உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ‘மீண்டும் போர் தீவிரமடையுமோ’ என்று அச்சத்தை கிளப்பியுள்ளது.