இலவச பட்டா வழங்குவது குறித்து ஏற்கனவே மதுரை மாவட்ட தி.மு.க.வினருக்கும் சி.பி.எம் கட்சியினருக்கு இடையே முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்பு விவகாரத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இறங்கிச் சீரமைப்பு பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்களுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் இணைந்து செயல்பட்டார்.
சு. வெங்கடேசன் வலியுறுத்தல்
இந்த நிலையில், “மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாகக் குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்…” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளது மதுரை மாவட்ட தி.மு.க கூட்டணிக்குள் மீண்டும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே கோரிக்கையை ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் வைத்திருந்தார். ஆனால், அவருக்குப் பதில் சொல்லாத அமைச்சர் பி.மூர்த்தி, தற்போது சு. வெங்கடேசனின் கோரிக்கை குறித்து கோவமாகப் பேசியுள்ளார்.
பி. மூர்த்தி சொல்வதென்ன?
மதுரையில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரையில் பெய்த கனமழையினால் எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படவில்லை. தேங்கிய அனைத்து மழைநீரும் அகற்றப்பட்டுள்ளது. மதுரையில் எங்கே பாதிப்புகள் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூற வேண்டும். எதற்காக நிவாரணம் கொடுக்க வேண்டும்?
செல்லூர் கண்மாயிலிருந்து வைகை ஆற்றுக்குப் புதிதாக அமைக்கப்பட்ட வாய்க்கால் நிரந்தர வாய்க்காலாகக் கட்டுவதற்கு ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வாய்க்கால்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை வரும் முதல்வரிடம் ஆட்சியரும், ஆணையரும் மழை, வெள்ளப் பாதிப்புகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் 107 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb