`எம்.ஜி.ஆரை’ பேசி அ.தி.மு.க-வினரை வசப்படுத்த விஜய் திட்டமா? – பாதிப்பு யாருக்கு?!

தன்னை `கூத்தாடி’ என்போரின் விமர்சனத்துக்கு எம்.ஜி.ஆரை உதாரணம் காட்டி காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார் விஜய். இந்த நிலையில், விஜய்யின் அரசியல் பேச்சுகள் தி.மு.கவுக்கு அடியாக விழுமா? அல்லது அ.தி.மு.க தொண்டர்களை தன்பக்கம் ஈர்த்து, வாக்குவங்கியைப் பிரிக்குமா? என்ற கேள்விகள் பலமாக எழுந்திருகின்றன.

தமிழ்த் திரைத்துறையும் தமிழ்நாடு அரசியலும்:

தமிழ்த் திரைத்துறையையும் தமிழ்நாடு அரசியல் வரலாற்றையும் பிரித்து பார்த்திட முடியாது. நாடக ஆசிரியர் தொடங்கி கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், நடிகைகள் என பல்வேறு முகங்களிலிருந்தும் வந்து தமிழ்நாடு அரசியலில் ஜொலித்தவர்கள் ஏராளம். குறிப்பாக, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரெல்லாம் தமிழ்நாட்டி முதல்வராகவே கோலோச்சியிருக்கின்றனர். கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துக்கு முன்னேறினார்.

அண்ணா – எம்.ஜி.ஆர் – கருணாநிதி

தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கூட `முரசே முழங்கு, `திண்டுக்கல் தீர்ப்பு’,` நீதி தேவன் மயங்குகிறான்’, `நாளை நமதே’ என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், `ஒரே இரத்தம்’, `மக்கள் ஆணையிட்டால்’ ஆகிய திரைப்படங்களிலும் `குறிஞ்சி மலர்’ என்ற நெடுந்தொடரிலும் நடித்திருக்கிறார். அதேபோல துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாமன்னன், கலகத்தலைவன் என 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்தும் முழுக்க திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்தான். அந்த வகையில்தான், தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்யும் அரசியலில் குதித்திருக்கிறார்.

ஆனால், `வெறும் திரைக் கவர்ச்சியை வைத்து மட்டுமே விஜய் அரசியலுக்கு வருகிறார், சினிமாக்காரர்களுக்கு அரசியலைப் பற்றி என்னத் தெரியும்’ என தி.மு.க உள்பட பா.ஜ.க,பா.ம.க, நா.த.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். குறிப்பாக, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்கள் `சினிமா கூத்தாடி’ என்று தரம்தாழ்ந்தும் இணைய தளங்களில் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அறிவிப்பு மாநாட்டில் உரை நிகழ்த்திய அக்கட்சியின் தலைவர் விஜய் தன்னை கூத்தாடி என்று அழைப்பர்களுக்கு அதிரடியான பதிலடி கொடுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து மேடையில் ஆவேசமாகப் பேசிய விஜய், “என்னதான் நீங்கள் என்னைத் தளபதி தளபதி என்று கூப்பிட்டாலும், சிலர் கூத்தாடி கூத்தாடி என்று என்னை அழைக்கிறார்கள். அந்த கூத்தாடி விஜய்தான் நான். கூத்து இந்த மண்ணோடும் மக்களோடும் கலந்த ஒன்று. இந்த கூத்தாடி என்கிற பெயர் நமக்கு மட்டும் வந்ததில்லை. அன்று தமிழ்நாட்டில் நம்ம ஊர் வாத்தியார் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் அந்த ஊர் வாத்தியார் என்.டி.ஆரும் கட்சி ஆரம்பித்தபோதும்கூட இதேமாதிரிதான் `கூத்தாடி… கூத்தாடி’ என்று கூப்பாடு போட்டார்கள். அவர்களையே அப்படி கூப்பிடும்போது நம்மை எப்படி கூப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் அந்த இரண்டு கூத்தாடிகள்தான், இரண்டு மாநிலங்களின் ஆகப்பெரும் தலைவர்களாகி இன்றும் மக்கள் மனதில் நீங்கா புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என எம்.ஜி.ஆரையும் என்.டி.ஆரையும் உதாரணம் காட்டினார்.

தவெக மாநாடு

தொடர்ந்து, “சினிமா என்றால் வெறும் பாட்டு, டான்ஸ், காமெடி, என்டர்டெய்ன்மென்ட் மட்டும் தானா… தமிழரின் வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடுதான் சினிமா. என்டர்டெயின்மென்ட் காரணத்தையும் தாண்டி சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய ஒரு பவர்ஃபுல் கருவிதான் சினிமா. திராவிட இயக்கம் பட்டித்தொட்டியெல்லாம் வளர்ந்ததே சினிமாவை வைத்துதான். நான் தெரியாமல்தான் கேட்கிறேன் கூத்தாடி என்றால் என்ன கேவலமான ஒரு பெயரா? இல்லை கெட்ட வார்த்தையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கூத்து சாதாரண வார்த்தை அல்ல; ஏனென்றால் கூத்து சத்தியத்தைப் பேசும் சாத்தியத்தைப் பேசும், கொள்கையைப் பேசும் கோட்பாட்டைப் பேசும், கோவத்தைப் பேசும் சோகத்தைப் பேசும், அரசியலைப் பேசும் அறிவியலைப் பேசும், நல்லதைப் பேசும் உள்ளதைப் பேசும், உண்மையைப் பேசும் உணர்வோடுப் பேசும்! கூத்து ஒரு கொண்டாட்டம் என்றால், கூத்தாடி அந்த கொண்டாட்டத்தின் குறியீடு.

கூத்தாடியின் உள்ளுக்குள் இருக்கும் கோவம் கொப்பளித்தால் அவனை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியாது. அவன் நினைத்ததை செய்து முடிக்கும் வரைக்கும் நெருப்பு போல் இருப்பான். அதனால்தான், குறியீடாக மாறிய கூத்தாடியைப் பார்த்தால் மக்கள் கூட்டம் கைத்தட்டும், கண்கலங்கும். காரணம் வேரொன்றும் இல்லை; அவன் நம்மைப் போலவே இருக்கிறானே, நமக்கான ஆளாக இருக்கிறானே, நாம் நினைத்ததைப் பேசுகிறானே, நமக்காகப் பேசுகிறானே… என்ற கனெக்ட் தான் கூத்தாடியை மக்கள் கொண்டாடக் காரணம்! அன்றைக்கு கூத்து இன்றைக்கு சினிமா அவ்வளவுதான்!” என்று காட்டமாக விளக்கமளித்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து அ.தி.மு.க-வினரை இழுக்கிறாரா விஜய்?

நடிகராக இருந்து அரசியலுக்கு வரும்போது விஜயகாந்த்தும் எம்.ஜி.ஆரைத்தான் முன்னோடியாக கூறியிருந்தார். விஜய்யும் தான் நடித்த வசீகரா, பைரவா, மெர்சல், பிகில் போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆரை குறியீடாகக் காட்டியிருக்கிறார். அதேபோல, 2006-2011 தி.மு.க ஆட்சியின்போது, தான் சந்தித்த நெருக்கடிகளைக் குறிப்பிட்டு, “முதல்ல எம்.ஜி.ஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்… அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?” என்றும் கேள்வி கேட்டிருந்தார்.

விஜய்

அந்தவரிசையில் தற்போதும், கூத்தாடி என்ற விமர்சனத்துக்கு எம்.ஜி.ஆரை உதாரணம்காட்டியிருக்கிறார். அதேபோல, இந்த மாநாட்டில் ஆளும் கட்சிகள் என்ற அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.கவையும், மாநிலத்தில் ஆளும் தி.மு.கவையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா? இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிற ஒரு குடும்ப சுயநலக் கூட்டம்தான் நம் அரசியல் எதிரி!” எனக்கூறி தி.மு.கவை விமர்சித்தார்.

அதேபோல, பிளவுவாத அரசியல், வர்ணாஸ்ரம எதிர்ப்பு, காவி பெயிண்ட் டப்பா எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள் என பா.ஜ.கவையும் காட்டமாக விமர்சித்தார். ஆனால், அ.தி.மு.க-வை ஒருவார்த்தைகூட சீண்டவில்லையே? என்ற கேள்வி எழுந்தது.

ரகுபதி

`அ.தி.மு.க-வுக்குதான் பாதிப்பு’ – திமுக

குறிப்பாக, தி.மு.க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “த.வெ.க மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. அ.தி.மு.க பற்றி பேசினால் எடுபடாது என்பதால் தி.மு.க பற்றி விஜய் பேசியிருக்கிறார். அ.தி.மு.க-வின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அ.தி.மு.க பற்றி விஜய் பேசவில்லை. பா.ஜ.க-வை வலுப்படுத்தும் வகையில் அ.தி.மு.க தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

`ஆளும்கட்சிக்குத்தான் பாதிப்பு’ – அ.தி.மு.க:

அதேசமயம், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார், “விஜய்யால் அ.தி.மு.க-வுக்கு எள் அளவுக்கு கூட பாதிப்பு ஏற்பட வாய்பில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, “விஜய் மாநாடு ஒரு சிறந்த தொடக்கமாக, கிராண்ட் ஒப்பனிங்காக அமைந்திருக்கிறது. விஜய் வெளியிட்டிருக்கும் கொள்கையான `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமதர்ம கொள்கையை கடைபிடித்து முதன்முதலாக தாய்த்தமிழ் நாட்டுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதேபோல, ஒரு குடும்பத்தின்பிடியில் தமிழ்நாடு சிக்கி விடக்கூடாது என்பதற்காத்தான் அன்றைக்கு ஏழை எளியர்வர்களுக்காக புதிய கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர். அந்தவகையில், எம்.ஜி.ஆரை வழிகாட்டியாக விஜய் சுட்டிக்காட்டியதை ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் வரவேற்கிறார்கள்.

ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ

தி.மு.க.வுக்கு எதிரான அ.தி.மு.க போராட்டகளத்தின் மறுவடிவமாகத்தான் தவெக மாநாட்டைப் பார்க்கிறேன். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது, எங்களின் எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள். எங்களுக்கு நிரந்தர வாக்கு வாங்கி இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எங்களை விமர்சிக்கிறார்கள். ரகுபதியே ஒரு அ.தி.மு.ககாரர்தான். காலவோட்டத்தில் காணமல் போய்விட்டார். அவருக்கெல்லாம் எங்களை விமர்சிக்க யோக்கியதை இல்லை. விஜய்யால் அ.தி.மு.கவுக்கு எள் முனை அளவுகூட பாதிப்பு இல்லை. ஆளும் கட்சிக்குத்தான் பாதிப்பு!” என்று விளக்கமளித்திருக்கிறார். முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க தலைவர் விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் அரசியல், யாருக்கு பாதிப்பு… உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY