“அதிமுக-வின் வாக்குகளை யாரும் ஈர்க்க முடியாது!” – விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், பிரிவினைவாதம் செய்பவர்களையும், திராவிட மாடல் என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்களையும் தங்களின் அரசியல் எதிரிகள் என பா.ஜ.க-வையும், தி.மு.க-வையும் விஜய் குறிப்பிட்டார்.

தவெக தலைவர் விஜய்

மேலும், `அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?’ என்று தி.மு.க-வை மறைமுகமாகச் சாடிய விஜய், தம்மோடு வருபவர்களுக்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணிக்கான அழைப்பு விடுத்தார். அதோடு, எதிர் தரப்பினர் முன்வைக்கும் கூத்தாடி விமர்சனத்துக்கு, `எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போதும் கூத்தாடிகள் என்றுதான் கூப்பாடு போட்டார்கள்’ என விஜய் பதிலளித்தார். விஜய்யின் இவ்வாறான பேச்சுகளுக்குப் பலதரப்பிலிருந்தும் நேர்மறையான, எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில், அ.தி.மு.க-வை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய் மாநாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அதில், இது சரி தவறு என்று நாம் சொல்ல முடியாது. அ.தி.மு.க-வை அவர் அதிகளவில் விமர்சிக்கவில்லையென்றால், அ.தி.மு.க சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று அர்த்தம். தி.மு.க-வும் பா.ஜ.கவும் மறைமுகமாக டீலிங்கில் இருப்பதாக நாங்கள் முன்பே கூறியதைத் தற்போது மற்ற கட்சிகளும் பேசத் தொடங்கியிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி

மேலும், கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கேற்றவாறு அமைப்பது. கொள்கை என்பது நிலையானது. அ.தி.மு.க-வின் வாக்குகளை யாரும் ஈர்க்க முடியாது. எல்லோருமே எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்கிறார்கள்தான். அவர் பெயரைச் சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. எனவே, எங்களோடு ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் அந்த சமயத்தில் வலிமையான கூட்டணி அமைப்போம்.” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb