‘திமுக-வை சீண்டிய விஜய் அதிமுக-வை தொடாதது ஏன்?’ – தவெக மாநாட்டு உரை டீக்கோடிங்!

விக்கிரவாண்டியில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய கட்சியின் தலைவர் விஜய், “ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து சிரிப்பதுபோல, தன்முன் ஒரு பாம்பு வந்தால் அதனையும் பயமின்றிப் பிடித்து விளையாடும். அதேபோல அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன். அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாம்பைக் கண்டு இந்தக் குழந்தைக்கு பயமில்லை.

இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார். ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்.

தவெக மாநாடு

அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும். காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு, அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவதும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம். வீரமங்கை வேலுநாச்சியாரும் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி த.வெ.கதான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும், சுயநலமின்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்” என்றார்.

தொடர்ந்து தனது கொள்கை, அரசியல் எதிரிகள் குறித்து பேசியவர், “கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும்தான் எதிர்க்கப் போகிறேன். ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?. இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி” என தி.மு.க, பா.ஜ.க-வுக்கு எதிராக கொதித்தார்.

TVK| Vijay – விஜய் – தவெக

“சினிமா என்றால் பாட்டு, நடனம், பொழுதுபொக்கு மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, என்று அனைத்தையும் உள்ளடக்கியது. சினிமாதான் தமிழகத்தில் சமூக அரசியல் புரட்சிக்கு உதவியது. திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமாதான். என்னை ‘கூத்தாடி’ என்று அழைக்கின்றனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த போதும் அவர்களை இதே பெயர் சொல்லித்தான் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும்தான் தமிழ்நாடு, ஆந்திராவில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினர். நான் சினிமாவுக்கு வந்தபோது என் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தினர். ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் உழைத்து மேலே வந்தேன். கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை. இரண்டும் நமது இரண்டு கண்கள். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்” என பேசினார்.

இதையடுத்து திமுக-வை சீண்டிய விஜய் அதிமுக-வை மட்டும் தொடாதது ஏன்?, அவரது பேச்சு எப்படி இருந்தது என்கிற கேள்விகளுக்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “விஜய் பேசியது எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் பேசியது அனைத்துமே திராவிடம் சார்ந்த கொள்கைகள்தான். சமூகநீதி, மதச்சார்பின்மை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை திராவிடக் கட்சிகளின் டெம்ப்ளேட்தான். மாநாட்டில் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இந்த நிலைப்பாடு எதிர்பார்த்த ஒன்றுதான். கரப்ஷன் கபடதாரிகள் என பேசியது அதிமுக-வையும் சேர்த்துதான். அதேநேரத்தில் அதிமுக வலிமையான கட்சியாக இல்லை. ஆக்டிவாகவும் அவர்கள் இல்லை. எனவேதான் அதிமுக குறித்து பெரிதாக பேசவில்லை. மேலும் திமுக எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார். அதிமுக-வுக்கு செல்லும் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்பதாலும் அவர்கள் குறித்து அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம்.

ப்ரியன்

அதேநேரத்தில் திமுகவை தாக்கிய அளவுக்கு பாஜகவை தாக்கவில்லை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடிகள் ஏற்படும் என பயப்படுகிறாரா என தெரியவில்லை. பாசிச எதிர்ப்பில் திமுக கூட்டணி கட்சிகள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை பாசிசம் பாயசம் என கிண்டல் செய்திருக்க கூடாது. எனவே அதில் கொஞ்சம் தெளிவு தேவை என்றுதான் நினைக்கிறேன். 2026-ம் ஆண்டு தேர்தலில் த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம் என சொன்னதுதான் மிக முக்கியமான விஷயம். இதை திமுக, அதிமுக சொன்னதில்லை. இதனால் திமுக கூட்டணிக்குள் நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே இந்த கோரிக்கையை விசிக பேசி வருகிறது. தற்போது விஜய்யின் கருத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் ஆதரித்து இருக்கிறார். அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். எடப்பாடியால் திமுக கூட்டணியை உடைக்க முடியவில்லை.

ஆனால் விஜய் சரியாக அம்பு எய்திருக்கிறார். திமுக எதிர்ப்பை இன்னும் தீவிரப்படுத்துகிறாரா, பாஜக எதிர்ப்பில் இருக்கும் குழப்பத்தை சரி செய்கிறாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கட்சியை எப்படி அடிமட்டத்தில் வலுப்படுத்துகிறார். அடிமட்ட தொண்டர்களிடத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையெல்லாம் பொறுத்துதான் கட்சி வளரும். முதலில் தன்னுடைய பலத்தை தெரிந்து கொள்ள விரும்புவார். எனவே அவரது தலைமையில்தான் கூட்டணி இருக்க வேண்டும் என நினைப்பார். விஜய்யின் செல்வாக்கு அறியாமல் பிற கட்சிகள் தலைமையை ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை. திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என நினைப்பர்வர்கள் இணையலாம். அதிமுக கூட விஜய் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சீமானுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதி விஜய்க்கு சென்றுவிடும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY