சட்டவிரோத குடியேற்றம்; இந்தியர்களை விமானங்களில் திருப்பியனுப்பும் அமெரிக்கா!

ஜீன் 2024 முதல், இந்தியா உட்பட 145 நாடுகளுக்கு 495 சர்வதேச விமானங்கள் மூலம் 160,000 நபர்களைத் திருப்பி அனுப்பியது அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை. 2024 ஆம் நிதியாண்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பும் இந்த நடவடிக்கையை, நாட்டின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டதாகத் தெரிவிக்கிறது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை.

அமெரிக்காவிற்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையேயான இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) அக்டோபர் 22 அன்று, சட்டப்பூர்வ விமானம் மூலம் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்துவது பற்றி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர் கிறிஸ்டி ஏ.கனெகல்லோ நெறிமுறைகளை விளக்கினார்.

இந்த திருப்பி அனுப்பும் உத்தியானது, சட்டப்பூர்வ குடியேற்ற வழிகளை மேம்படுத்துதல், ஒழுங்கற்ற இடம்பெயர்வு, மற்றும் மனித கடத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களைச் சுரண்டும் நாடு கடந்த குற்றவியல் அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்காவின் விரிவான அணுகுமுறையின் ஓர் அங்கமாக இந்த உத்தி செயல்படுகிறது.

2022-23 ஆம் ஆண்டில் 90,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளதாக அமெரிக்கச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான குடியேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு அங்கமாக, வெளி விவகார அமைச்சகம் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்துகிறது.

விமானம்

தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான எகிப்து, மொரிட்டானியா, செனகல், மற்றும் ஆசியப் பிரதேசங்களான உஸ்பெகிஸ்தான், சீனா, இந்தியா போன்ற பல்வேறு புவியியல் பகுதிகளைச் சேர்ந்த நாட்டினரைக் குறிவைத்துத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம்.

கடந்த ஆண்டு, டெல்டா ஏர்லைன்ஸின் விமானத்தில் 16 மாணவர்கள் அட்லாண்டாவிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.