தமிழ்நாடு வனத்துறை சார்பில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மலையேற்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ரூ.5,099 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.
“மலையேற்றத் திட்டம் என்ற பெயரில் அநியாயம் செய்கிறார்கள். வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்து வருகின்றனர். இதற்கு முன்பு மலை ஏற எந்தக் கட்டணமும் இல்லை.
இனி வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு ரூ.5,000 செலுத்த வேண்டுமா. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறுகையில், “வெள்ளியங்கிரி ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் எந்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.
அதேபோல வனத்துறையும், “ஆன்மிக பயணத்துக்கும், மலையேற்றத் திட்டத்துக்கும் சம்மந்தம் இல்லை. ஆன்மிக பயண காலத்தில் மலையேற்ற முன்பதிவு நிறுத்தி வைக்கப்படும்.” என்று கூறியுள்ளனர்.