பா.ஜ.க-வின் C டீம்தான் தமிழக வெற்றிக் கழகம் என்று அமைச்சர் ரகுபதி விஜய்யை விமர்சித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வி.சாலையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் விஜய் த.வெ.க கொள்கை குறித்தும் கட்சியின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார். மதச்சார்ப்பற்ற சமூகநீதி, ஆட்சி அதிகாரம், இருமொழிக் கொள்கை, தன்னாட்சி உரிமை, மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, உற்பத்தி திறன், போதையில்லா தமிழகம் உள்ளிட்ட பல கொள்கைகளை அறிவித்திருந்தார்.
விஜய் பேசியது குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளைத் தமிழக மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்பதை நேற்றைய தினம் அவர்கள் வெளியிட்டிருக்கிற ஜெராக்ஸ் காப்பியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே, அது ஜெராக்ஸ் காப்பி தான்.
எங்களுடைய கொள்கைகளை, அவர்கள் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்களே தவிர, திராவிட மாடல் ஆட்சியிலான முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்ல… அந்த கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்து யாரும் எடுத்துவிட முடியாது, பிரித்துவிட முடியாது. உழைப்பிற்கு எடுத்துக்காட்டு நம் முதல்வர் ஸ்டாலின். இதுவரைக்கும், பல அரசியல் கட்சியினுடைய A டீம், B டீம் பார்த்திருக்கிறோம். இது பா.ஜ.கவின் C டீம்.
தமிழக மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால், அங்கே எடுபடாது. தமிழக மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கிற ஆளுநரைப் பற்றி பேசினால், அவருக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கும் என்பதாலேயே ஆளுநரைப் பற்றி பேசியிருக்கிறாரே தவிர முழுக்க முழுக்க இது பா.ஜ.க-வினுடைய C டீம். அவர் யாருடைய, A டீமும், B டீமும் இல்லை என்று சொன்னார். தன்னுடைய டீம், C டீம் என்று அவருக்கே தெரியும், எனவே, அது C டீம். எங்களுடைய கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது ” என்று விமர்சித்திருக்கிறார்.