மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால் ஆளும் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இக்கூட்டணியில் இன்னும் 12 தொகுதிகளுக்கு இறுதி தீர்வு காணப்படாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க இது வரை 121 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிகள் தலா 45 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இது வரை 83 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 87 வேட்பாளர்களையும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 67 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
இக்கூட்டணியில் இன்னும் 15 தொகுதிகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதையடுத்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட் மீண்டும் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார்.
பாலாசாஹேப் தோரட் இது தொடர்பாக அளித்த பேட்டியில், “எங்களது மூன்று கட்சிகளும் 280 தொகுதியில் போட்டியிடும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மும்பையில் 2 முதல் 3 தொகுதியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அத்தொகுதியில் நட்பு ரீதியில் போட்டியிடுவது குறித்து இன்னும்முடிவு செய்யவில்லை என்றும், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பாலாசாஹேப் தோரட் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் சயான் கோலிவாடா தொகுதியில் கணேஷ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜ.க சார்பாக தமிழ் செல்வம் போட்டியிடுகிறார். இதனால் ஒரே தொகுதியில் இரண்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் கணேஷ் குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பாக மான்கூர்டு தொகுதியில் நவாப் மாலிக் போட்டியிட விரும்பினார். ஆனால் அதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்ததால் நவாப் மாலிக்கை அஜித்பவார் தேர்தலில் நிறுத்தாமல் அவரது மகளுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதனால் மான்கூர்டு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நவாப் மாலிக் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவரை சந்தித்து அஜித் பவார் பேசினார். ஆனாலும் அதனை கேட்க நவாப் மாலிக் மறுத்துவிட்டார். மான்கூர்டு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY