Tvk Vijay : `மது அருந்தினால் நோ என்ட்ரி, மெக்கானிக் குழு, நெரிசல் தவிர்க்க திட்டம்’- மாநாடு ஹைலைட்ஸ்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் அரசியல் மாநாடு நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்காக மாபெரும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறவிருக்கும் திடலுக்கு சென்றோம். இரண்டே வாரங்களில் மாநாட்டு ஏற்பாடு பணிகள் தீவிரப்படுத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. தந்தை பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், சட்டமேதை அம்பேத்கர், அஞ்சலை அம்மையார் ஆகியோரின் கட் அவுட்கள் மாநாடு மேடையின் முகப்பிலும், ஜார்ஜ் கோட்டை செட்டில் அமைந்த நுழைவு வாயிலிலும் பிராமாண்டமாக வைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தா.வெ.க மாநாடு

மக்கள் மாநாடு நடக்கும் இடத்துக்குள்ளே நுழைய நான்கு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருகின்றன. விஜய்க்கு மிகுந்த பாதுகாப்புடன் தனிவழியும், மாநாட்டு களத்தில் அவர் தங்குவதற்கு வீடு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர 6 சொகுசு கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மாநாடு இருக்கைகளுக்கு நடுவில் விஜய் நடந்து கூட்டத்தின் நடுவே பேசுவார் எனத் தெரிகிறது. அதனால் பாதுகாப்புடன் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பாதுகாப்புக்காக துபாயிலிருந்து ‘Gentur’ நிறுவனத்தின் கைதேர்ந்த பவுன்சர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் விஜய்க்கு முழு பாதுகாப்புக் கொடுக்கின்றனர். பலம்கொண்ட ஒவ்வொரு பவுன்ஸர்களுக்கும் விஜய்யைத் தவிர வேறு யாரையும் தெரியவில்லை. அதனால், எவ்வளவு முக்கிய நபராக இருந்தாலும், த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகளாகவே இருந்தாலும் விஜய் அருகிலேயே வரமுடியாத அளவு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள்.

தா.வெ.க மாநாடு

கட்சி நிர்வாகிகளும் இரவு – பகலாக ஷிஃப்ட் போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். விழுப்புரம் காவல்துறை முழுப் பாதுகாப்பை வழங்கினாலும், ‘த.வெ.க’ தனி பாதுகாப்புப் பட்டாளத்தை இறக்கி மாநாட்டை தன் கன்ரோலுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அங்கு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். மக்களுக்கு மருத்துவத் தேவை ஏற்படும் பட்சத்தில் உடனே உதவிக்குக் களமிறங்க மருத்துவக் குழுவினர் பல இடங்களில் முகாம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொலைந்த ஆட்களை, பொருட்களை கண்டுபிடித்துக் கொடுப்பதற்கு ஆங்காங்கே உதவி நிலையங்களும் அமைக்கப்படிருக்கின்றன. இதுதவிர 500-க்கும் மேற்ப்பட்ட கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காகப் பொருத்தப்பட்டிருக்கிறது.

வயதானோர், கர்ப்பிணி பெண்கள், உடல்நலக்குறைவுள்ளவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என தவெக தலைவர் விஜய் முன்பே அறிவுறுத்தியிருந்தார். மக்கள் மாநாட்டினுள் நுழையும் இடத்தில் பக்காவான செக்கிங் ஏற்பாடுகள் இருக்கின்றன. போதை, மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அனுமதியில்லை என்பதைக் கராராகச் சொல்கின்றனர். மது அருந்தியிருப்பதை செக் செய்வதற்கு கருவிகளும் தயாராக இருக்கிறது. விஜய்க்குப் பொதுவாகவே ஃபேம்லி ரசிகர்கள் அதிகம். அதனால், தாய்மார்கள் குடும்பத்துடன் மாநாட்டு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு, செக்கிங் ஏற்பாடுகள் எல்லாம் பலமாகச் செய்யப்பட்டிருக்கின்றன.

தா.வெ.க மாநாடு

பார்க்கிங்கில் பாராட்டிற்குரிய நல்ல விஷயம், மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனம் திடீரென பழுதாகிவிட்டாலோ, அல்லது பஞ்சர் ஆகிவிட்டாலோ அதை இலவசமாக உடனடியாக சரிசெய்துகொடுக்க மெக்கானிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், வாகனங்களை பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளவும் கண்காணிப்பு ஏற்பாடுகள், சிசிடிவி ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. மேலும், வாகனம் சகதிகளில் சிக்கிக்கொண்டால் அதை மீட்கவும் டிராக்டர் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

கடும் வெயில் நிலவி வருவதால் இலவச தண்ணீர் சேவை ஏற்பாடுகள் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில்கள் தரப்படவிருக்கின்றன. மாநாட்டின் பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருகின்றன. இதுதவிர த.வெ.க தொண்டர்கள் வெயிலுக்குத் தொப்பி, துண்டு, நீர் மோர் உள்ளிட்ட சேவைகளையும் வழங்க ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

தா.வெ.க மாநாடு

விழா மேடையிலிருந்து வெகு தூரத்தில் அமர்ந்திருப்பவர்களும் பார்க்கும் வகையில் எல்.இ.டி திரைகள் அங்காங்கே பொருத்தப்பட்டிருக்கிறது. அதுதவிர, விழா மேடைக்குப் பின்புறம் வரிசையாக கேரவன்கள் நிற்கின்றன். நாளை நடக்கவிருக்கும் மாநாட்டில் சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மற்ற கட்சியினர், மக்கள் உற்று கவனிக்கும் த.வெ.க வின் முதல் மாநாடு இது. அதனால், இம்மாநாட்டை சிறப்பாகவும், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு முன்மாதிரியாகவும், பாதுகாப்பாகவும் நடத்திக் காட்டி, மக்களிடம் நம்பிக்கைப் பெறுவதே விஜய்யின் முதன்மையான எண்ணமாக இருக்கிறது. மாநாடு நாளை மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இதுவரை நடிகர் விஜய் த.வெ.க கட்சி கூட்டங்களுக்கு குறித்த நேரத்திற்குச் சரியாக வந்திருக்கிறார். 9.15 மணிக்கு விஜய் வருகை என்றால், சரியாக 9.15-க்கு மேடை ஏறி பேச்சைத் தொடங்கிவிடுவார். அதனால் நாளையும் குறித்த நேரத்தில் மாநாடு தொடங்கி, மக்கள் தாமதமில்லாமல் வீடு திரும்பும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் மாநாட்டை முடிப்பது தா.வெ.க கட்சிக்கு சிறப்பான முன்மாதிரியாக இருக்கும்.

தா.வெ.க மாநாடு

அதே போல, மாநாடு முடிந்ததும் ஒட்டுமொத்த மக்களும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சிப்பது கூட்ட நெரிசலுக்கும், பல விபரீதங்களுகும் வழிவகுத்துவிடும். அதைச் சரியாக கையாள ஒவ்வொரு பிளாக்காக அமைக்கப்பட்டிருக்கும் மாநாட்டுத் திடல், மாநாடு முடிந்ததும் ஒவ்வொரு பிளாக்காக திறக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs