ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின்மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவை மட்டுமல்லாமல், அ.தி.மு.க வட்டாரங்களை மொத்தமாகவே ஒரு உலுக்கு உலுக்கியிருகிறது. இதற்கிடையே, “வேலுமணிக்கு ஆதரவளித்த ஓ.பி.எஸ்., வைத்திலிங்கத்தைக் கைவிட்டுவிட்டார்” எனக் கொதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் தொண்டர் உரிமை மீட்புக்குழுவிலுள்ள சீனியர் நிர்வாகிகள்.
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய நிர்வாகிகள் சிலர், “வேலுமணி, வைத்திலிங்கத்தின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிந்தபோது, ‘அ.தி.மு.க ஒன்றிணைந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் வேலுமணி மீது தி.மு.க அரசு வழக்குப் பதிந்திருக்கிறது’ என சூடாக அறிக்கை வெளியிட்டார் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமியுடன் வேலுமணி இருந்தாலும், அவருக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கை அ.தி.மு.க-விற்குள் பரபரப்பை உருவாக்கியது.
ஓ.பி.எஸ்-ன் மகனான ரவீந்திரநாத்தும் வேலுமணிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். வேலுமணிக்காக அப்படி பொங்கிய ஓ.பி.எஸ்., வைத்திலிங்கத்தின் மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கும் நிலையில், அதைக் கண்டித்து ஒரு அறிக்கைக்கூட வெளியிடவில்லை. ‘அமலாக்கத்துறையைக் கண்டித்தால், மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தது போலாகிவிடுமே..’ என அமைதியாகிவிட்டார் ஓ.பி.எஸ். அதுதான் எங்களுக்கெல்லாம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நியாயமாகப் பார்த்தால், ‘வைத்திலிங்கம் மீது தி.மு.க தொடர்ந்தது பொய் வழக்கு’ என பா.ஜ.க எங்கள் பக்கம் ஆதரவாக நின்றிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, எங்களுடன் கூட்டணியிலுள்ள பிற கட்சிகளும்கூட வைத்திலிங்கம் மீதான ரெய்டைக் கண்டிக்கவில்லை. அதை ஓ.பி.எஸும் கேள்வி கேட்கவில்லை. கடந்த அக்டோபர் 24-ம் தேதி இரவு, ஒரத்தநாட்டிலுள்ள வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டை முடித்துக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பினார்கள்.
அதன்பிறகு ஓ.பி.எஸுக்கு ஃபோன் போட்ட வைத்திலிங்கம், ‘என்னண்ணே நடக்குது, வேலுமணி மீதும்தான் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் போட்டாங்க. அவர்மேலே அமலாக்கத்துறை பாயலயே? என் மேலே மட்டும் ரெய்டு நடத்தவேண்டிய அவசியமென்ன..? இதையெல்லாம் நீங்க கேட்கமாட்டீங்களா..’ என தடதடத்திருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ்., ‘ரெய்டு தகவல் வந்தவுடனேயே, மத்திய அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டேன். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. அவர் இந்தியா வரட்டும், அவரிடம் பேசிக்கொள்ளலாம்’ என சமாதானம் சொல்லியிருக்கிறார். ஆனால், எந்த சமாதானமும் வைத்திலிங்கத்தின் உஷ்ணத்தைத் தணிக்கவில்லை.
வைத்திலிங்கம் கோபப்படுவதிலும் காரணம் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, ‘போட்டி வேட்பாளரை நிறுத்தினால் அ.தி.மு.க வாக்குகள் சிதறும். ஆகவே, உங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்’ என பா.ஜ.க தலைவர்கள் ஓ.பி.எஸின் வீடு தேடி வந்து பேசினர். அதைத்தொடர்ந்து, எங்கள் அணியின் வேட்பாளரான செந்தில் முருகனை வாபஸ் பெறவைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், சிவகங்கை மாவட்டம் திருமயத்திற்கு சாமி கும்பிட வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பக்கத்துத் தொகுதியான இராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாகப் பிரசாரத்திற்கு வர மறுத்துவிட்டார். விருதுநகரில் போட்டியிட்ட ராதிகா சரத்குமாருக்காக பிரசாரத்திற்கு வந்த ஜெ.பி.நட்டா, இராமநாதபுரம் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இப்படி பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் யாருமே வராமல்தான், இராமநாதபுரம் தொகுதியில் இரண்டாமிடம் பெற்றார் ஓ.பி.எஸ். இன்றுவரை, அவர்களை எங்களுடைய கூட்டணிக் கட்சியாகத்தான் மதிக்கிறோம். ஆனால், அந்த உணர்வு அவர்களிடம் இல்லை. ‘பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டுமா’ என்கிற தயக்கத்தில், இதுவரை ரெய்டைக் கண்டித்து ஓ.பி.எஸிடமிருந்து ஒரு அறிக்கைக்கூட வராதது, தொண்டர் உரிமை மீட்புக்குழுவுக்குள் புகைச்சலை உருவாக்கியுள்ளது” என்றனர்.
காளையார்கோவிலில், வரும் அக்டோபர் 27-ம் தேதி மருது பாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. அந்த விழாவுக்கு நேராக காளையார்கோவிலுக்குச் செல்ல ஆயத்தமாகிறாராம் வைத்திலிங்கம். “வழக்கமாக, மதுரையில் ஓ.பி.எஸை வரவேற்று அவருடன் ஒன்றாகத்தான் காளையார்கோவிலுக்குப் பயணிப்பார். ஏனோ இந்தமுறை நேராக காளையார்கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்துவிட்டார். அவர் மனதிலும் ஒரு அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது” என்கிறார்கள் வைத்திக்கு நெருக்கமானவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb