“ஆதார் அட்டை ‘அடையாள சான்று’ மட்டுமே… வயதை சொல்லும் ஆவணம் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.
2015-ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக்கைச் சேர்ந்த சிலாக் ராம் என்பவர் இன்னொருவரை அழைத்துக்கொண்டு பைக்கில் சென்றுள்ளார். ஆனால், அப்போது விபத்து ஏற்பட்டு சிலாக் ராம் உயிரிழந்துள்ளார்.
சிலாக் ராம் மரணத்திற்கு இழப்பீடு கேட்டு, மோட்டர் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பாயம் அவரது பள்ளி சான்றிதழின் படி, அவரது வயது 45 என்று கணக்கிட்டு, ரூ.19.35 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனமோ, சிலாக் ராமின் ஆதார் அட்டை படி, அவரது வயது 47 என்றும், அவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.9.22 லட்சம் தான் என்றும் கூறியது.
இதை எதிர்த்து சிலாக் ராமின் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் பூயான், “சிறார் நீதி சட்டம், 2005-ன் படி, பள்ளி டி.சியை தான் வயது கணக்கிட எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதார் என்பது அடையாள சான்று மட்டுமே…வயதை குறிக்கும் ஆவணம் அல்ல. வயது குறித்து தெரிந்துகொள்ள பள்ளி சான்றிதழ்களை பார்க்கலாம்” என்று தீர்ப்பளித்தனர்.