தனது திரைப்படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களைப் பேசியும், மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது ரசிகர் மன்றங்களால் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் அரசியலுக்கு வருவதை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நடிகர் விஜய், கடந்த மார்ச் மாதம் `தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினர். அதன்பின்னர், அவ்வப்போது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டு ஐந்து மாதங்களாக அமைதியாக இருந்த விஜய், ஆகஸ்ட் 22-ல் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கொள்கைகளை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
அதையடுத்து, அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு என்று அறிவித்த த.வெ.க தலைவர் விஜய் அதற்கான வேலைகளையும் ஆரம்பித்தார். நாளை மறுநாள் (அக்டோபர் 27) மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டுக்கான மேடை அமைத்தல், வரும் தொண்டர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாநாட்டுத் திடலில் விஜய் கட் அவுட்டுக்கு வலது பக்கத்தில் வீரமங்கை வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் ஆகியோரின் கட் அவுட்கள் இருக்க, இடது பக்கத்தில் சட்ட மேதை அம்பேத்கர் அருகில் இடம்பெற்றுக்கும் விடுதலைப் போராட்ட வீராங்கனையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஞ்சலையம்மாள் கட்-அவுட் பேசு பொருளாகியிருக்கிறது.
1890 ஜூன் 1-ம் தேதி கடலூரில் பிறந்த அஞ்சலையம்மாள், ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்திருந்தார். அப்போதைய ஆங்கிலேயர் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்ட குணமிக்க வராகத் திகழ்ந்தார். 1908-ல் முருகப்பா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு இடம்பெயர்ந்த அஞ்சலையம்மாள், கணவருடன் சேர்ந்து பல சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். இவர், 1921-ல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, தென்னிந்தியாவிலிருந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். தனது சொத்துகளையெல்லாம் போராட்டங்களுக்கே செலவு செய்தார்.
1857-ல் சிப்பாய் கலகத்தின்போது பலரின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த ஜேம்ஸ் நீல் என்பவருக்கு, 1860-ல் சென்னையில் நிறுவப்பட்டிருந்த சிலை இருந்தது. அந்தச் சிலையை அகற்றக்கோரி, 1927 செப்டம்பரில் நடைபெற்ற போராட்டத்தில் கணவருடன் கலந்துகொண்டு அச்சிலையை உடைத்ததற்காக ஆங்கிலேயரால் ஒரு வருடம் சிறைத் தண்டனைக்குள்ளானார். பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் தமிழ்நாட்டுக்கு வந்த மகாத்மா காந்தி, அவரைச் சந்தித்த பின்பு அஞ்சலையம்மாளின் மகள் அம்மாக்கண்ணுவை லீலாவதி என்று பெயர் மாற்றி தன்னுடன் குஜராத்துக்கு அழைத்துச் சென்றார்.
1931-ல் கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயரால் கடுமையான தாக்குதலுக்குள்ளான அஞ்சலையம்மாள், ஆறு மாதம் சிறைத்தண்டனைக்குள்ளாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, கர்ப்பிணியாக இருந்த அஞ்சலையம்மாள் சிறைக்குச் சென்றபின் ஒரு மாதம் விடுப்பு கேட்டு வெளியே வந்து ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் மீண்டும் கைக்குழந்தையுடன் சிறைக்குள் நுழைந்தார்.
தண்டனையை நிறைவுசெய்த அதே ஆண்டில் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அடுத்தாண்டு, மகாத்மா காந்தியின் மது ஒழிப்பு கொள்கைக்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக் கொண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியதால் ஒன்பது மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு அவர் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது 1934-ல் ஒருமுறை மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவரைச் சந்திக்க விரும்பினார்.
ஆனால், ஆங்கிலேயர் விதித்த தடையால் அந்தச் சந்திப்பு தடைப்படும் சூழல் ஏற்படவே, அஞ்சலையம்மாள் அந்தத் தடையை மீறி பர்தா அணிந்துகொண்டு வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலையம்மாளின் இந்தத் துணிச்சலைக் கண்டு வியந்த மகாத்மா காந்தி, அவரை `தென்னாட்டு ஜான்சி ராணி’ என்று அழைத்தார். அதன்பிறகு, 1940-ல் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம், 1941-42ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு போராடியதற்காகச் சிறைக்குச் சென்றார்.
இதற்கிடையில், 1937, 1946-ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். பின்னர், 1947-ல் நாடு சுதந்திரமடைந்த பிறகுச் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை மறுத்த அஞ்சலையம்மாள், 1952-ல் மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். மேலும், இவர் தன்னுடைய பதவிக்காலத்தில் வீராணம் வாய்க்காலிலிருந்து தீர்த்தாம்பாளையத்துக்குக் கிளை வாய்க்காலை உருவாக்கிக் கொண்டு வந்து, அங்கு நிலவிய குடிநீர் பிரச்னையைத் தீர்த்தார். இதனால், அந்தக் கால்வாய்க்கு அவரின் பெயரே சூட்டப்பட்டு இன்று அஞ்சலையம்மாள் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது.
இறுதிவரை மக்களின் நலன்களுக்காகச் சிந்தித்த அஞ்சலையம்மாள், 1961 பிப்ரவரி 20-ம் தேதி தனது 71-வது வயதில் உயிர்நீத்தார். இவரின் நினைவாக, கடந்த ஆண்டு இவரது சொந்த ஊரான கடலூரில் இவருக்குத் தமிழக அரசால் நிறுவப்பட்ட சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக, அவர் சிறையிலிருந்த காலத்தில் அவருடன் சிறைவாசம் அனுபவித்த க.ரா. ஜமதக்னி, நாடு சுதந்திரமடைந்த அதே ஆண்டில் அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள் சாந்திக்கும், தமிழக திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் நாகநாதனுக்கும் பிறந்தவர்தான் எழிலன் நாகநாதன். அஞ்சலையம்மாளின் கொள்ளுப்பேரனான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88