தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்’ – NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு சல்மான் கானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோல்டி பிரர் தற்போது கனடாவில் பதுங்கி இருக்கிறார். சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு செல்லும்போது அவரை கொலைசெய்ய திட்டமிட்டு இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. சல்மான் கானை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டு இருந்தனர்.

சல்மான் கான் நடவடிக்கையை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் 70 பேர் தொடர்ந்து கண்காணித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கும் இம்மாத தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டார். சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்ற ஒரு காரணத்திற்காக பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சுட்டுக்கொலை செய்தனர். சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டதில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி பிரர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த சென்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல், போனில் 9 நிமிடம் பேசியிருக்கிறார். சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அன்மோல் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோர் சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. அன்மோல் அமெரிக்கா, கனடா அல்லது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.