நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால் வயநாடு எம்.பி பதவியை ராஜிநாமா செய்தார். காங்கிரஸ் பாரம்பர்யம் மிக்க தொகுதியான ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார்.
வயநாடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜார்கண்ட், மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுடன் சேர்ந்து நவம்பர் 13-ம் தேதி வயநாட்டில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வயநாடு இடைத்தேர்தலில் ராகுலின் சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். நேற்று சகோதரர் ராகுல் காந்தி, தாய் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுண கார்கே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புடைசூழ வயநாட்டுக்குச் சென்ற பிரியங்கா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மூலம் பிரியங்கா காந்தியைவிட அவரது கணவருக்கு பல மடங்கு அதிக சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பிரியங்கா காந்தியின் கையில் பணமாக 52,000 ரூபாய் உள்ளதாகவும், 4.24 கோடி ரூபாய்க்கான முதலீடு உள்ளதாகவும், வங்கி கணக்கில் 3.67 லட்சம் ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா பரிசாக வழங்கிய 2004 மாடல் ஹோண்டா சி.ஆர்.பி கார் தனது பெயரில் உள்ளதாகவும், அதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய் எனவும் பிரியங்கா தெரிவித்துள்ளார். 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 29.55 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்களும் பிரியங்கா காந்தி பெயரில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் கையில் 2,18,084 ரூபாய் உள்ளதாகவும், 37.91 கோடி ரூபாய்க்கான முதலீடு உள்ளதாகவும், 65.55 கோடி ரூபாய்க்கான அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கி கணக்கில் 37.61 லட்சம் ரூபாய் உள்ளதாகவும், 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா லேண்ட் க்ரூசர் கார், மினி கூப்பர், 4.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுசுகி பைக் ஆகியவையும் ராபர்ட் வதேராவிடம் உள்ளதாகவும் பிரமாணபத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, பிரியங்காவுக்கும், அவரது சகோதரர் ராகுல் காந்திக்கும் சம உரிமை உள்ள 2.10 கோடி ரூபாயிலான சொத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்கா 15.75 லட்சம் ரூபாய் வங்கி கடனும், ராபர்ட் வதேராவுக்கு 10 கோடி ரூபாய்க்கான வங்கிக்கடனும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்காவுக்கு 11.98 கோடி ரூபாய்க்கான அசையா சொத்துகள் உள்ப்பட மொத்தம் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், ராபர்ட் வதேராவிடம் 65.55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பிரியங்கா காந்தி மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் வேட்புமனுத்தாக்கல் பிரமாணபத்திரம் மூலம் தெரியவந்துள்ளது. ஹத்ராஸில் போராட்டம் நடத்தியது சம்பந்தமான வழக்கு, எக்ஸ் வலைத்தளத்தில் தவறான தகவல் ட்வீட் செய்ததாக ஒரு வழக்கு, பாம்புபிடிக்காரர்களை சந்தித்தது என மூன்று வழக்குகள் அவர்மீது உள்ளன. 52 வயது ஆன பிரியங்கா டெல்லி யுனிவர்சிட்டியில் சைக்காலஜ் பட்டப்படிப்பு படித்துள்ளார். இங்கிலாந்தின் யுனிவர்சிட்டி ஆஃப் ஸண்டர்லாண்ட்-ல் (sunderland) பெளத்தம் சம்பந்தமான பி.ஜி டிப்ளமோவும் படித்துள்ளார். இதுவரை தேர்தலில் போட்டியிடாத பிரியங்கா முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுவதால் காங்., கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb