Chandrachud: “உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சந்திரசூட் சிதைக்கிறார்” – மூத்த வழக்கறிஞர் காட்டம்

தேர்தல் பத்திரம் வழக்கு, மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட். நீதிமன்றத்தில் விசாரணையின்போதே வழக்கறிஞர்களைக் கண்டிப்பது, அவர்களுக்குப் பாடம் எடுப்பது, பிற நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்குவது எனச் சந்திரசூட் எது செய்தாலும் பேசுபொருளாகிறது.

சந்திரசூட் – பிரதமர்
மோடி – கமலா தாஸ்

சமீபத்தில், சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலானது. அதற்கு, “நீதிபதிகள் தங்கள் மத அடையாளங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்தக்கூடாது. நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட செயல்கள் நீதி வழங்குவதில் குறுக்கிடக்கூடும் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக்கூடாது” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு விமர்சனங்களும் வந்தன. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் இவரும் ஒருவர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சந்திரசூட் சிதைத்துவிட்டதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே விமர்சித்திருக்கிருக்கிறார். தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சந்திரசூட் குறித்துப் பேசிய துஷ்யந்த் தவே, “என்னுடைய 46 வருட சட்டப் பணி அனுபவத்தில், வெளியில் பரவலாகத் தெரியக்கூடிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட்டைப் பார்க்கிறேன்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தவே

அவர் விளம்பரத்தை விரும்புகிறார். அவர் என்ன பேசுகிறார், என்ன சொல்கிறார், என்ன சாப்பிடுகிறார் என அவரைப் பற்றிய அனைத்தையும் மணிக்கு மணிக்கு ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. இத்தகைய சூழல் உருவாவதை அவர்தான் அனுமதிக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்லாது உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே அவர் சிதைத்திருக்கிறார்” என்று கூறினார்.

முன்னதாக, சென்சிடிவான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றும் விவகாரத்தில் சந்திரசூட்டை விமர்சிக்கும் தொனியில் அவருக்குக் கடந்தாண்டு இறுதியில் துஷ்யந்த் தவே கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb