Elon Musk vs Ambani: சாட்டிலைட் பிராட்பேண்ட் யுத்தத்தில் வெல்லப் போவது யார்?!

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தில் விடப்படாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் சந்தையை விரிவுப்படுத்துவதற்கான போட்டி என்பது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் vs எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் என்று சூடுபிடித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை நகரங்களில் இருக்கும் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள், அதே அளவு வேகத்துடனும், எளிதாகவும் கடைக்கோடி கிராமங்களில் கிடைப்பதில்லை. இன்னும் தொலைபேசி லைன்களின் வழியிலான இணைய சேவை (டிஎஸ்எல்) கூட பல பகுதிகளில் கிடைக்காத நிலையே தொடர்கிறது. இப்படியான ஒரு சூழலில் சாட்டிலைட் பிராட்பேண்ட் என்பது தொலைதூர கிராமங்களுக்கான இணைய பயன்பாட்டுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

அதாவது, செயற்கைக் கோள்கள் அனுப்பும் சிக்னல்களால் எங்கெல்லாம் சென்றடைய முடியுமோ அங்கெல்லாம் சாட்டிலைட் பிராட்பேண்ட் மூலம் இணைய சேவை பெற முடியும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் இடைவெளியும் இதன் மூலம் குறையும்.

சேவை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2025 ஆண்டு வாக்கில் 20 லட்சத்தை எட்டும் என்று ஐசிஆர்ஏ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே, இதற்கான போட்டியும் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், முன்னணி செயற்கைக்கோள் நிறுவனமான SES அஸ்ட்ராவுடன் இணைந்துள்ளது.

இன்னொருபுறம் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமோ அதிவேக இணையத்துக்காக பூமியின் மேற்பரப்பில் இருந்து 160 முதல் 1,000 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தாழ்வான பூமி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் SES அஸ்ட்ரா நிறுவனம், நடுத்தர – பூமி சுற்றுப்பாதை (MEO) செயற்கைக்கோள்களின் குறைந்த கட்டணம் கொண்ட இணைய சேவையை வழங்குகிறது.

ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு சொந்தமாக சுமார் 6,419 செயற்கைக்கோள்கள் உள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 40 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. கடந்த 2021 முதல் இந்தியாவில் இணைய சேவைகளைத் தொடங்க எலான் மஸ்க் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், இந்தியாவில் இருக்கும் ஒழுங்குமுறை விதிகளால் அவை இன்னும் சாத்தியமாகவில்லை.

ஒருவேளை இம்முறை எலான் மஸ்க் நிறுவனம் இந்தியாவுக்குள் கால்பதித்தால், அன்னிய முதலீட்டை ஈர்க்கும் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு அது ஊக்கமளிப்பதாக அமையும் என்பது பொருளாதார நிபுணர்களின் கூற்று. இன்னொருபுறம் மத்திய அரசு அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகளை எடுப்பதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

கடந்த காலங்களில் ஏலம் விடப்படும் செயல்முறைகள் லாபகரமானதாக இருந்து வந்தாலும் கூட, இந்த முறை செயற்கைக்கோள் அலைக்கற்றையை நிர்வாக ரீதியாக ஒதுக்கும் தனது முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த நிர்வாக ரீதியான ஒதுக்கீடு மூலம் தகுதியுள்ள நிறுவனங்களிடம் ஸ்பெக்ட்ரம் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிசெய்வது மட்டுமின்றி, ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்கும்.

ஆனால், சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைகளை நேரடியாக மக்களுக்கு வழங்குவது குறித்த தெளிவான சட்ட விதிகள் இந்தியாவில் இல்லாததால், நியாயமான போட்டியை உறுதிப்படுத்த ஏலம் அவசியம் என்று அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாதிடுகிறது.

மத்திய அரசின் முடிவுகளை பரிசீலனை செய்ய வைக்க முகேஷ் அம்பானி முயற்சிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் (அம்பானியை) அழைத்து, இந்திய மக்களுக்கு இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்கை போட்டியிட அனுமதிப்பது மிகவும் சிரமமாக இருக்குமா என்று கேட்பேன்” என்று பதிவிட்டிருந்தார். இதன்பிறகே சாட்டிலைட் பிராட்பேண்ட் விவகாரத்தில் மஸ்க் – அம்பானி இடையிலான போட்டி உறுதியானது.

ஆனால், ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அம்பானி மட்டுமே அல்ல. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வயர்லெஸ் சேவை தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், நகர்ப்புற, உயர் வர்க்க வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் தொலைத்தொடர்பு உரிமங்களை எடுத்து, மற்றவர்களைப் போல ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனங்களின் இந்த எதிர்ப்பு என்பது, சர்வதேச நிறுவனங்களை போட்டியிலிருந்து விலக்கி வைக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவை என்பது நிலம்சார் இணைய சேவைகளுக்கு உடனடியான போட்டி இல்லையென்றாலும் கூட விரைவிலேயே அது மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்பதே தொலைதொடர்பு நிறுவனங்களின் அச்சமாக இருக்கிறது.

முக்கியத்துவம் பெறுவது ஏன்?

இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% பேரை இன்னும் இணைய சேவை சென்றடையவில்லை. அதில் பெரும்பாலும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு ஆய்வு. சீனாவில் 109 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இது இந்தியாவை விட 34 கோடி அதிகம். உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் இணைய பயன்பாடு சற்றே பின்தங்கி இருக்கிறது என்பதே நிதர்சனம்.

அனைவருக்கும் கிடைக்ககூடிய சரியான விலை நிர்ணயிக்கப்பட்டால், சாட்டிலைட் பிராட்பேண்ட் இந்த இடைவெளியை நிரப்பக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்தியவின் எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அளவு குறைந்த விலையில் எலான் மஸ்க்கால் இணைய சேவையை தரமுடியுமா என்பது கேள்விக்குறியே!

காரணம், ஸ்டார்லிங்க் மற்ற நாடுகளில் வழங்கும் இணைய சேவை என்பது இந்திய நிறுவனங்கள் வழங்குவதை காட்டிலும் 10 மடங்கு அதிகம். காரணம் MEO செயற்கைக்கோள்களை விட ஸ்டார்லிங்க் பயன்படுத்தும் LEO செயற்கைக்கோள்களை ஏவவும் பராமரிக்கவும் அதிக செலவுகள் ஆகும்.

எப்படி இருந்தாலும், இணைய பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்த காலகட்டத்தில் அடித்தட்டு, நடுத்தர மக்கள் தாங்கும் அளவுக்கான கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே எந்த நிறுவனமும் இந்தியா போன்ற நாட்டில் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு எலான் மஸ்க், முகேஷ் அம்பானி என யாரும் விதிவிலக்கல்ல.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88