ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கெனவே வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு செல்லும் என்பதையும் நீதிமன்றம் கூறியுள்ளது.
வரும் காலத்தில் சரியான தரவுகளின் அடிப்படையில் இன்னும் பின்தங்கிய மக்கள் யாரெனும் இருந்தாலும் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு உரிமை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவு என்று திருமாவளவன் கூறியிருக்க வேண்டும்.
அவர்களின் எந்த நடவடிக்கையும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இல்லை. 20 ஆண்டுக்கால விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நடவடிக்கைகளில், என்றைக்காவது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்து உள்ளார்களா.
உள் ஒதுக்கீடு என்பது வாழ்க்கை போராட்டம். 30 ஆண்டுக்காலம் போராடி இந்த ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. கூட்டணி கட்சியில் இருக்கும்போது அந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்களோ, அவர்கள் கொண்டு வருகின்ற மசோதாவை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
எதிர்த்திருந்தால் நீங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியிருக்கலாமே… உள் ஒதுக்கீடு என்பது கலைஞரின் திட்டம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து வருகிறது. திருமாவளவன் நிலையான கருத்தில் நிற்க வேண்டும்.
எங்களை எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக கூறுங்கள். ஆதரிக்கிறோம் ஆதரிக்கிறோம் என்று கூறிக் கொண்டே விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்திருப்பது சமூகநீதிக்கு எதிரானதா.
அருந்ததியர் மக்களுக்கு கீழ் ஏதேனும் சாதி இருந்தால் அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்து கொடுங்கள். தமிழக முதல்வர் இது சம்பந்தமாக குழு அமைத்து வகைப்படுத்துதலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.