`அடையாளமும் இல்லை… அங்கீகாரமும் இல்லை…!’ – 12 ஆண்டுகளாகப் போராடும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்

“2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, ` பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது தி.மு.க. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும், அந்த வாக்குறுதி நிறைவேற்ற தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குமுறுகின்றனர் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள். அது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமாரிடம் பேசினோம்.

பகுதி நேர ஆசிரியர்கள்

“2011 – 2012-ம் கல்வி ஆண்டில் வேலைக்கு சேர்ந்து இந்த வருடத்துடன் 14 கல்வி ஆண்டு ஆகிறது. 2023-ம் ஆண்டு வரை எங்களது ஊதியம் 10,000 ரூபாயாக இருந்தது. 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,500 சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும் 10,000 ரூபாய் தனியாகவும் 2500 ரூபாய் தனியாகவும் வழங்குவதால், ஒவ்வொரு முறையும் சம்பளம் வழங்குவதற்கு தாமதமாகிறது. பணி நிரந்தரம்தான் எங்கள் கோரிக்கை என்றாலும், நாங்கள் சம்பளத்திற்கே தவிக்கிறோம். எனவே 12,500 ரூபாயை ஒரே தவணையாக வழங்க வேண்டும்.

எங்களுடன் வேலைக்குச் சேர்ந்த நிரந்தரப் பிரிவு ஆசிரியர்கள், தற்போது ரூ.70,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் நாங்கள் ரூ.12,500 மட்டுமே ஊதியமாக வாங்குகிறோம். SSA சமக்ர சிக்க்ஷா திட்டம் மூலமாகத் தமிழக அரசு எங்களை மாநில அரசு திட்டத்தில் சேர்த்தது. இந்த திட்டத்தில் மூன்று பிரிவின் கீழ் 12,000 ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே உள்ள கல்வித் தகுதி ஒன்றுதான். ஆனால் பணியமத்திய பிரிவு மட்டுமே மாறுபடுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ், 2011-2012 நிதி ஆண்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் பணிபுரிந்த 5,171 இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 175 ஆவது அரசாணை மூலம்  பணி  நிரந்தரம் செய்யப்பட்டது. இதே போலவே அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் 12,000 ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் 12 ஆண்டுகளாக இந்த அரசு எங்களைத் தற்காலிக வேலையிலேயே வைத்துள்ளது. 

முதல்வர் ஸ்டாலின்

போனஸ் கூட, பகுதி நேர வேலை ஆசிரியர்களான எங்களுக்குக் கிடைப்பதில்லை. பகுதி நேர ஆசிரியர்களின் தற்போதைய ரூ.12,500 தொகுப்பு ஊதியத்தை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் பெறுகின்ற pay band level 10-ன் படி ரூ.20,600-ஐ அடிப்படை உதியமாக நிர்ணயம் செய்து அரசு வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களான எங்களுக்கு அடையாள அட்டை கூட கிடையாது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது .ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 

எங்களுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் ஊதியம் தாமதமாகி, பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு அக்டோபர் 9-ம் தேதிதான் கிடைத்தது. இதுவே மத்திய அரசின் பங்களிப்பு தாமதமான போது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட, 32,500 பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் பெருமனதோடு மாநில அரசு நிதியிலிருந்து வழங்கி உதவினார். அதைப் போல, பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்து, ஊதியம் உயர்த்தி வழங்கினால் எங்களுக்கு தீபாவளிப் பரிசாக இருக்கும். தீபாவளிக்கு துணிமணி, பட்டாசு, பலகாரம் வாங்க முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் தங்களது குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும்” என்றார். 

பள்ளிக் கல்வித்துறை

`பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கலாமா?’ என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், `ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும் தி.மு.க அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது, பகுதி நேர ஆசிரியர்  பெருமக்களுக்கு செய்கின்ற பெரும் துரோகம்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

பகுதி நேர ஆசிரியர்களின் குரலுக்கு செவிமடுக்குமா தமிழக அரசு ?