மகா., சட்டமன்ற தேர்தல்: இறங்கிவந்து காங்கிரஸ்.. தொகுதி பங்கீட்டை போராடி முடித்த எதிர்க்கட்சி கூட்டணி

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இப்பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆளும் மகாயுதி கூட்டணி நேற்றே தொகுதி பங்கீட்டுக்கு தீர்வு கண்டுவிட்டது. கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இறுதி முடிவை எட்டினர். இதில் பா.ஜ.க 155 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 78 தொகுதியிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதியிலும் போட்டியிட இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டே சென்றது.

எதிர்க்கட்சிகளின் சின்னம்

விதர்பாவில் 12 தொகுதிகளுக்கும், மும்பையில் 3 தொகுதிகளுக்கும் தீர்வு காணப்படாமல் இருந்தது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் தங்களது முடிவில் உறுதியாக இருந்தன. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இப்பிரச்னை குறித்து டெல்லிக்கு சென்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பிரச்னையை இழுத்தடிக்க வேண்டாம் என்றும், விரைவில் பேசித்தீர்க்கும்படியும் கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.

அதோடு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்சி தலைமை மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட்டை அவசரமாக மும்பைக்கு அனுப்பி வைத்தது. பாலாசாஹேப் தோரட் நேற்று மும்பை வந்து முதலில் சரத் பவாரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நேரம் பேசினார். அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவருடன் நீண்ட நேரம் பேசினார். நேற்றே தொகுதி பங்கீடு முறைப்படி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவுதான் பங்கீடு முடிவானது. இதையடுத்து இன்று முறைப்படி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது எட்டப்பட்டுள்ள முடிவின் படி எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 105 தொகுதியிலும், சிவசேனா 95 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 84 தொகுதியிலும் போட்டியிடும். எஞ்சிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்படும். மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சி 18 தொகுதியிலும், காங்கிரஸ் 14 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதியிலும் போட்டியிடும். மும்பையில் பாந்த்ரா கிழக்கு, பைகுலா, வர்சோவா தொகுதிகள் குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

தொகுதிக்காக கட்சி மாறிய தலைவர்கள்

நவிமும்பை பா.ஜ.கவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கணேஷ் நாயக் மகன் சந்தீப் நாயக், இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அவர் கேட்ட தொகுதிக்கு பா.ஜ.க ஏற்கனவே வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதனால் சந்தீப் நாயக் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வந்தார். ஆனால் இப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தலைமையில் சந்தீப் நாயக் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் 30 பேருடன் அவர் சரத் பவார் கட்சியில் சேர்ந்தார். பேலாப்பூர் தொகுதியில் சந்தீப் நாயக் போட்டியிடுவார் என்பதை ஜெயந்த் பாட்டீலும் உறுதிபடுத்தினார்.

2019ம் ஆண்டு வரை கணேஷ் நாயக் மற்றும் அவரது மகன் ஆகியோர் சரத்பவார் கட்சியில்தான் இருந்தனர். அதன் பிறகுதான் பா.ஜ.கவில் சேர்ந்தனர். பா.ஜ.கவில் இருந்து விலகவேண்டாம் என்று தனது மகனிடம் கணேஷ் நாயக் கேட்டுக்கொண்டார். ஆனால் தந்தையின் ஆலோசனையை மீறி சந்தீப் நாயக் சரத் பவார் கட்சியில் இணைந்துள்ளார். இதே போன்று முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க எம்.பியுமான நாராயண் ராணே மகன் நிலேஷ் ராணே தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளார். அவர் கொங்கன் பகுதியில் உள்ள குடால் தொகுதியில் போட்டியிடுகிறார்.