அமெரிக்கா தேர்தல் களம்
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்கம், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் ஜோ பைடனுக்குப் பதில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள்முதலே, `அமெரிக்காவின் முதல் பெண் அதிபராவாரா கமலா ஹாரிஸ்’ என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
எலான் மஸ்க்
இன்னொருபக்கம், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் ( Space X) நிறுவனங்களின் நிறுவனரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார். இதற்காகவே, அமெரிக்கா பி.ஏ.சி (America PAC) என்ற இணையதளப் பக்கத்தை எலான் மஸ்க் தொடங்கியிருக்கிறார்.
தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்…
இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை அமெரிக்கா பி.ஏ.சி இணையதளத்தில் தன்னுடைய மனுவில் கையெழுத்திடும் நபர்களில் தினமும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் தருவதாக எலான் மஸ்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பி.ஏ.சி இணையதளப் பக்கத்தில் இருக்கும் அந்த மனுவில், “முதல் மற்றும் இரண்டாவது சட்ட திருத்தங்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. இதில் கையெழுத்திடுவதன் மூலம், முதல் மற்றும் இரண்டாவது சட்ட திருத்தங்களுக்கு எனது ஆதரவை உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க்..
இதன்மூலம், ட்ரம்புக்கு ஆதரவைத் திரட்டும் எலான் மஸ்க், நேற்று முன்தினம் பென்சில்வேனியாவில் டிரம்புக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், முதல் நபராக ஜான் டிரெஹர் என்பவருக்கு ஒரு மில்லியன் டாலருக்கான காசோலையை வழங்கினார். ஏற்கெனவே, அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெரும் விவாதப்பொருளாக இருக்கும் சூழலில், ஆயுதம் ஏந்துவதற்கு ஆதரவாக மனுவில் கையெழுத்திடும் நபர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் என ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் பணத்தை வாரியிறைப்பது பேசுபொருளாகியிருக்கிறது.