Stalin: “சென்னை வருகிறேன் என்றார்; வந்தார். ஆனால்…” – முரசொலி செல்வம் குறித்து ஸ்டாலின் உருக்கம்

கடந்த 10 ஆம் தேதி முரசொலி நாளிதழ் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் காலமானார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நேற்று (21.10.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இறப்பதற்கு முன்பு என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். ‘நான் சென்னை வருகிறேன்’ என்றார். வந்தார். ஆனால் உடல் மட்டும்தான் வந்தது.

கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை அடுத்து, முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்குப் பிறகு, என் மனம் உடைந்து சுக்கு நூறாகிவிட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். காரணம், பள்ளிக்காலம் முதல், எனக்கு இயக்கப் பணிகளைக் கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம். மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படிப் பேச வேண்டும் என எனக்கு நிறைய பயிற்சி கொடுத்திருக்கிறார்.

இன்று அவர் இல்லை என நினைக்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். தி.மு.க., முப்பெரும் விழாவின்போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும்.

ஸ்டாலின், முரசொலி செல்வம்

திராவிட இயக்க கருத்தியலை எல்லோருக்கும் ஆழமாகக் கொண்டு சேர்க்கும் வகையில் முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் ‘திராவிட இதழியல் பயிற்சி அமைப்பு’ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.” என்று மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY