கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை வெட்டி எடுத்து கேரளாவுக்குக் கடத்தும் கனிம வள கடத்தல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளா மாநிலத்துக்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்கின்றன.
இந்த லாரிகளால் கன்னியாகுமரி மாவட்ட சாலைகளில் விபத்துகள் அதிகரித்ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் கனிம வள லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு, சோதனை சாவடி மூலம் கனரக வாகன சோதனை எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், கனிம வளம் கொண்டு செல்ல அரசு சார்பில் பாஸ் வழங்கப்பட்டு, அந்த பாஸ் வைத்திருக்கும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில லாரிகள் அவ்வப்போது விதிகளை மீறிச் செயல்படுவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு லாரிகள் கனிம வளங்களைக் கடத்தி வருவதாக போலீசருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் வடசேரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் லாரியில் கனிம வளம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதிச் சீட்டைச் சோதனை செய்தபோது அந்த பாஸ் போலியாகத் தயாரிக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரசு முத்திரைகள் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளின் கையொப்பமும் போலியாக இருந்ததும் சோதனையில் தெரியவந்தது.
அந்த சமயத்தில் லாரியின் பின்னால் வந்த இரண்டு சொகுசு கார்களையும் போலீஸார் சோதனை செய்தனர். அந்த காரில், முறை கேடாக அரசு முத்திரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட போலி பாஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போலி பாஸ் தயாரிக்க அரசு முத்திரையுடன் கூடிய போலி ரப்பர் ஸ்டாம்ப், திருநெல்வேலி புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரின் கையொப்பம் ஆகியவை அடங்கிய போலி சீல்கள், போலி ரசீதுகள் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. போலி முத்திரைகளுடன் பிடிபட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (32), டார்வின் ராஜ் (31), அனீஷ்குமார் (32), டார்லின்ராஜ் (21), ராஜேஷ் (49), வினிஷ் ராஜ் (43), கேரளா மாநிலம் செங்கவிளையைச் சேர்ந்த ரதீஷ் (41) ஆகிய 7 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.