திமுக இளைஞரணி அலுவலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி, “ராஜாஜி மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார். அவர் தனது சொந்தப் பணத்தில் பள்ளிகளைத் திறக்கவில்லை. காமராஜர் குடியாத்தத்தில் போட்டியிட்டபோது, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இல்லை. அதனால், காமராஜர் தோற்று விடக்கூடாது என்பதற்காக, பேரறிஞர் அண்ணாதுரை திமுக-வை அங்கு போட்டியிடாமல் செய்து ஆதரவளித்தார்” என்று பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. மறுபக்கம், ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதோடு, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் ராஜீவ் காந்திக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காமராஜர் குறித்த தன்னுடைய பேச்சுக்கு ராஜீவ் காந்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ராஜிவ் காந்தி, “சில தினங்களுக்கு முன்பு, கர்மவீரர் காமராஜரும் முத்தமிழறிஞர் கலைஞரும்’ என்கிற புத்தக வெளியீட்டு விழாவில், பெருந்தலைவர் காமராஜர் குறித்த நான் பேசியது காங்கிரஸ் பேரியக்க தோழர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் என்னிடம் அவர்களின் வருத்தத்தினை தெரிவித்தார்கள். பெருந்தலைவர் காமராஜரை சிறுமைபடுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை.
பெருந்தலைவர் காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து. என் பேச்சினை வைத்து இந்தியா கூட்டணிக்குள் உரசல் என விசம பிரசாரம் செய்து மதபாசிச கும்பலும், அடிமை அதிமுக-வும் குளிர் காய விரும்புகிறது அதற்கு ஒருபோதும் என் பேச்சு இடம் தராது. நான் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb