சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.
நேற்று நள்ளிரவில் மெரினா சாலையில் இருந்த காரை எடுக்கக்கோரி காவல்துறையினர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் காரின் உள்ளே இருந்த ஆணும் பெண்ணும் முழு போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து போலீசாரை மிக இழிவாகப் பேசியதுடன், அந்த இருவரும் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!’ – மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்… போலீஸ் விசாரணை!
நேற்று போலீசாரை மிரட்டும் விதமாகவும் கேலியாகவும் பேசிய இருவரையும் இன்று கைது செய்தனர். இந்த நிலையில் அந்த நபர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ ஒன்றை சென்னை மாநகர காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், “என் பெயர் சந்திரமோகன் நான் வேளச்சேரியில் இருந்து வருகிறேன். நேற்று 12 மணியளவில் நானும் என்னுடைய தோழியும் மெரினா அருகில் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த காவலர்கள் அங்கிருந்த அனைவரையுயம் எழுப்பிக்கொண்டிருந்தனர். அதனால் எனக்கு கோபம் வந்தது.
என் பக்கத்தில் வந்தபோது நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். கெட்ட வார்த்தையெல்லாம் பேசிவிட்டேன். ஓவர் போதையில் இருந்ததால் நிதானமாக இல்லை. காவல்துறையினர் எனத் தெரிந்ததும் அவர்களை எதோ திட்டிவிட்டு அவர்களிடம் சொல்லாமலே காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
இனி காவல்துறையினரை இதுபோல பேச மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனப் பேசியிருக்கிறார் அந்த நபர்.