மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஆளும் மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) ஆகிய கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மூன்று கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மொத்தம் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளும் சில தொகுதிகளை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதில் பா.ஜ.க., 156 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிவசேனா 78 தொகுதியிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதியிலும் போட்டியிடத் திட்டமிட்டு இருக்கின்றன என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க ஏற்கனவே 99 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. இதில் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகளும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அஜித்பவார் கட்சியானது வேட்பாளர் பட்டியலை அறிவிக்காவிட்டாலும், தனது கட்சியைச் சேர்ந்த சிலருக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதத்தைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அஜித்பவாரின் கட்சி அலுவலகத்திற்குத் தலைவர்கள் திரளாக வந்திருந்தனர்.
எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியிலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்துக்கொண்டிருக்கிறது. நேற்று வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 210 தொகுதிகளுக்கு மட்டுமே இறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் 62 தொகுதிகள் இருக்கின்றன. அதில், 8 முதல் 12 தொகுதிகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தொகுதிகளைக் கொடுக்க மறுத்து வருகிறது. இன்று (அக்டோபர் 22) எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சித் தலைவர்கள் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்கின்றனர்.
நேற்று (அக்டோபர் 21) வரை காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியிலிருந்தனர். ஆனால் இன்று காலையில் மும்பை திரும்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட் நேரடியாக சரத்பவாரைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் உத்தவ் தாக்கரேவையும் சந்தித்துப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து மாலையில் சரத்பவார், உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88