15 சந்திப்புகள், 340 மணி நேர ஆலோசனை; 12 தொகுதிகளுக்காக முட்டிமோதும் உத்தவ் தாக்கரே – காங்கிரஸ்!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க ஏற்கனவே 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், ஆளும் மகாயுதி கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முழுமையாக தொகுதி பங்கீடு முடியவில்லை. சிவசேனா(உத்தவ்) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்துக்கொண்டே செல்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா(உத்தவ்), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்திவிட்டன. இப்பேச்சுவார்த்தையில் பெரும்பாலான தொகுதியில் பங்கீடு முடிந்துவிட்ட போதிலும், இன்னும் 12 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது.

குறிப்பாக விதர்பா பகுதியில் 12 தொகுதிகளுக்கு காங்கிரஸ் மற்றும் சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் தற்போது இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் பிரச்னைக்குரிய தொகுதிகள் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மற்றொரு புறம் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசி இருக்கின்றனர்.

இச்சந்திப்பு குறித்து சிவசேனா மூத்த தலைவர் அனில் தேசாய் கூறுகையில், ”பிரச்னைக்குரிய தொகுதிகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. சரத் பவார் காங்கிரஸ் தலைமையுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு உடன்பாடு எட்டப்பட்டு இருக்கிறது” என்றார். அவர்கள் சந்தித்துவிட்டு சென்ற பிறகு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் நசீம் கானும் சரத் பவாரை சந்தித்து பேசினர். மூன்று கட்சிகளும் இது வரை 15 முறை சந்தித்து 320 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கின்றன. அப்படி இருந்தும் தொகுதி பங்கீட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது.

விதர்பாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. அங்கு கால் பதிக்கவேண்டும் என்று சிவசேனா விரும்புகிறது. எனவேதான் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் மகாவிகாஷ் அகாடியில் 30 முதல் 40 தொகுதிகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”நாளை எங்களது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு முன்பு கூட்டணி தலைவர்கள் சந்தித்து தீர்வு காணப்படாமல் இருக்கும் தொகுதிகளுக்கு தீர்வு காண்பார்கள். காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலையும் நாளை வெளியிடும்” என்று தெரிவித்தார்.