தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவனிக்கப்படாத ஆளுநர் ரவியின் ‘அபாய’ உரை! – முழு அலசல்

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட `டிடி தமிழ் பொன்விழா – இந்தி மாத நிறைவு விழா’ நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடும்போது `திராவிடம்’ என்ற சொல்வரும், `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை மட்டும் தவிர்த்து விட்டு பாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவே ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த நிகழ்வில் பேசிய சர்ச்சைக்குரிய, அபாய உரை வெளியில் தெரியாமல் போய்விட்டதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிடி தமிழ் பொன்விழா – இந்தி மாத நிறைவு விழா’ நிகழ்ச்சி

கடந்த அக்டோபர் 18-ம் தேதி, சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் டிடி தமிழ் பொன்விழா ஆண்டு மற்றும் இந்தி மாத நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதே தி.மு.க மாணவரணி சார்பில், `இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும்’ எனக் கோரி சென்னை தொலைக்காட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதற்கிடையில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி மட்டும் தவிர்க்கப்பட்டு, அதற்கடுத்த வரி இரண்டுமுறை தொடர்ச்சியாகப் பாடப்பட்டது. இந்த சம்பவம் தமிழக அரசியிலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது பாடியர்களின் கவனக்குறைவால் நடந்த தவறு என விளக்கம் எல்லாம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!” தனது எக்ஸ் தளத்தில் என காட்டமாக விளாசியிருந்தார்.

ஸ்டாலின்

அதேபோல, துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள். யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்!” என விமர்சித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த விமர்சனங்களையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, “முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.” என ராஜ்பவன் எக்ஸ் தளத்தில் பதிலளித்தார்.

இந்தப் பதிவை குறிப்பிட்டு மீண்டும் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், “ எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள மாண்புமிகு ஆளுநருக்குச் சில கேள்விகள்:

ஆளுநர் ஆர்.என்.ரவி

‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? ‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் – உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?

‘ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது’ எனச் சொல்லியிருக்கிறீர்கள். ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!

ஆளுநர் ரவி,
முதல்வர் ஸ்டாலின்

கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? “தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்” என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா? ‘திராவிட மாடல் காலாவதியான கொள்கை’ என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?

தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா? தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது? உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, #திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள். நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டார்.

பதிலளித்த டிடி தமிழ்:

இந்த சர்ச்சைக்குப் பதிலளித்த டிடி தமிழ் நிர்வாகம், “சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது, கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டுள்ளார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தது.

பதிலளித்த டிடி தமிழ்

இந்தநிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் இந்திமாத நிறைவுவிழா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசிய பேச்சு பெருமளவு வெளியில் தெரியாமல் போய்விட்டது என சமூக வலைதளவாசிகள் ஆளுநரின் கருத்தைப் பகிர்ந்து விமர்சித்துவருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் இந்தி மொழி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தி மாத விழா கொண்டாடப்படுவதன் மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். பாரதத்தில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்படுகின்றன. அதுபோலத்தான் இந்தி மொழியும் கொண்டாடப்படுகிறதே தவிர திணிக்கப்படவில்லை. தொடக்கத்தில், தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இருப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது. நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று, அங்கிருக்கும் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் உரையாடும்போது, தமிழ் மக்களிடையே இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதைக் கண்டேன். என்னிடமே பலர் இந்தியில் உரையாடினார்கள்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியது

அதேபோல, தமிழ்நாட்டில் வலிமை வாய்ந்த மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் போன்றவற்றிலிருந்த சமஸ்கிருத துறைகளை மூடிவிட்டார்கள். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்த சமஸ்கிருத துறையை அழித்தேவிட்டனர். தமிழ் மிகவும் பழைமையான மொழி என்பதில் பெருமைகொள்கிறோம். எதிர்பாராத விதமாக, தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது. அரை நூற்றாண்டுகளாக தமிழக மக்களின் எண்ணத்தில் விஷம் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களின் பிரித்தாளும் கொள்கை இங்கு வெற்றி பெற்றதில்லை. பாரதம் எப்போதும் ஒன்றாக இருந்திருக்கிறது. பாரதத்தின் ஆன்மிகத் தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு தமிழ் குறித்துப் பேசுகிறவர்கள், இந்தியாவை விட்டு தமிழைக் கொண்டு செல்வதற்கு எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

இந்த நாட்டில் 28 மாநிலங்கள் இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும்தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு என எந்தவொரு பிற இந்திய மொழியையும் அனுமதிப்பதில்லை. இவர்கள், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க விரும்புகிறார்கள். இங்கிருக்கும் இளைஞர்கள் கன்னடம், மலையாளம் தெரியாததால் கர்நாடகா, கேரளா செல்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மொழிவாரியாக மக்கள் தனிமைப்படுத்தும்போது, மற்றைவைகளிருந்தும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இதுதான் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மொழியின் அடிப்படையில் பிரிப்பதன் மூலம், கலாச்சாரத்தை அழிக்க முடியும். தமிழகத்தில் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் 75 சதவீத மாணவர்கள் இரண்டு இலக்கு எண்களை கூற முடியாது என ஆய்வுகள் கூறுகிறது. 78 சதவீத மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியாது என ஆய்வுகள் கூறுகிறது.ஆனால் 100% வெற்றி என கூறுகின்றனர். தமிழகத்தில் கல்வி தரம் கீழ் இறங்குவதை பார்க்க முடியாது. தமிழகத்தில் மிக பெரிய அளவில் பி.ஹெச்.டி பட்டம் பெறுகின்றனர். ஆனால் அதில் 1% கூட மத்திய அரசின் உயர்கல்வி ஆய்வுகளுக்கு எடுத்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது.இந்தியா வளர கூடாது என இந்தியாவில் உள்ள நபர்கள் வெளிநாட்டில் உள்ள நபர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.  ” எனக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

`பிரிவினைவாதம் பேசுவது ஆளுநர்தான்!’

இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் எழிலன் நாகநாதனிடம் பேசினோம். “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மிகவும் நேர்த்தியாக, சரியாகப் பின்பற்றுவது தமிழ்நாடு அரசுதான். அதேபோல, அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் அவருக்கு உரிய மரியாதையையும் நாம் கொடுக்கிறோம். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியோ தனது தார்மீக பொறுப்பை மறந்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்யக்கூடியவராக, தனது பதவியைத் தொடர்ந்து மிஸ்யூஸ் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பதால் தான் கலந்துகொள்ளக்கூடிய கல்லூரி, பல்கலை நிகழ்ச்சிகளிலும் இந்த சித்தாந்தப் பிரசாரத்தை செய்கிறார். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற டிடி தமிழ் பொன்விழா மற்றும் இந்தி மாத நிறை விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஆளுநர், அந்த நிகழ்ச்சியில் `திராவிட நல் திருநாடும்’ வரி நீங்கலாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது சிரிக்கிறார்.

எழிலன் நாகநாதன்

அதன்பிறகு உரை நிகழ்த்தும்போது, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையையும், திராவிடத்தையும் விமர்சிக்கிறார். இந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையையும், சம்ஸ்கிருதத்தையும் உயர்த்திப்பேசுகிறார். திராவிடப் பண்பாட்டை பேசும் நம்மை பிரிவினைவாதம் பேசுபவர்கள் என்கிறார். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்திருக்கும் அட்டவணை மொழிகளுக்கு எதிராக பேசுகிறவர் யார்? இந்தித் திணிப்பை பிரதானப்படுத்தி மாநில மொழியை, மாநிலத்தின் உரிமைகளை ஒழிக்க நினைப்பவர் யார்? இந்திய அரசியலமைப்பு சொல்லும் `Governor is but a shorthand expression for the State government’ என்பதற்கு எதிராக செயல்படுகிறவர் யார்? இந்த அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராகப் பேசுபவர் யார்? மத, இன அடிப்படையில் வெறுப்பு பிரச்சாரத்தை செய்பவர் யார்? ஆளுநர் தானே! இப்படி ஒட்டுமொத்தமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசும் ஆளுநர் தான் பிரிவினைவாதம் பேசுகிறார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியது

தமிழ்நாட்டில் ஆர்வம் இருப்பவர்கள் எல்லா மொழிகளையும் படிக்கிறார்கள். எந்த மொழி படிக்கவும் இங்கு தடையில்லை. ஆனால், வலிந்து இந்தி மொழித் திணிப்பதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். வடமாநிலங்களிளெல்லாம் மும்மொழிக் கொள்கை இல்லை. அங்கு இந்தி என்கிற ஒருமொழிக் கொள்கைதான். அதிலும், உத்தரப்பிரதேசம் பள்ளிக்கல்வியில் 60% பேர் இந்தி மொழியில் ஃபெயில் ஆகிறார்கள். ஒரேமொழி இந்தியைக்கூட அவர்களால் ஒழுங்காக அங்கு கற்பிக்கமுடியவில்லை. ஆனால், இங்கு இந்தித் திணிப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். எத்தனையோ இந்திய மொழிகளை இந்தி மொழி காலி செய்திருக்கிறது. அதேசமயம், நாம் மொழி தனித்துவம் பேசியதனால்தான் நம்முடைய தமிழ்த் திரைப்படங்களெல்லாம் பாலிவுட் ஆதிக்கம் இல்லாமல், தனித்தியங்கி இன்று உலக அளவில் விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதற்கெல்லாம் அடித்தளமிட்டது திராவிட இயக்கங்கள்தான். உண்மையை சொல்லப்போனால், கூகுள் டிரான்ஸ்லேட்டர்களெல்லாம் வந்திருக்கும் இந்த நவீன தொழில்நுட்ப யுக காலத்தில் மொழி ஒரு பிரச்னையா? மொழி பிரச்னையே இல்லை! ஆனால், ஆளுநர் தேவையில்லாமல் தொடர்ச்சியாக இந்தி திணிப்புக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் பேசிக்கொண்டும் செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்” என பதிலடி கொடுத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk`