“ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது” – உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பத்திரிகையாளராகவும் வேலைபார்த்து வந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக, மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான முன்னாள் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக வழக்கறிஞர் முகமது கம்ரான் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, முகமது கம்ரான் ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்படுவதை நீதிமன்ற அமர்வு கண்டறிந்தது.

நீதிமன்ற உத்தரவு

அதையடுத்து, முகமது கம்ரானைக் கடிந்துகொண்ட நீதிமன்ற அமர்வு, “ஒன்று அவர் வழக்கறிஞராக இருக்க வேண்டும். இல்லையென்றால் பத்திரிகையாளராக இருக்க வேண்டும். ஆனால், ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் இரண்டு வேலைபார்ப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில். அவர் தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ள முடியாது” என்று கூறியது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம், வழக்கறிஞராக இருந்துகொண்டே பத்திரிகையாளராகவும் பணியாற்றியதற்காக முகமது கம்ரான் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.