`முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்; திராவிடம் என்பது இனம் அல்ல இடம்’ – ஹெச்.ராஜா எச்சரிக்கை!

வேலூரில், பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பகுத்தறிவு பற்றிப் பேசுகிற இந்த திராவிட கூட்டத்திற்கு நாகரிகம் தெரியவில்லை. ஒரு வரி விட்டுப் போனதற்கு ஆளுநரை ஏன் விமர்சிக்க வேண்டும்? அது பாடியவரின் தவறு. `பாடியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டால், நீங்கள் மனநோயாளிகள் கிடையாது. நடுநிலைப் புத்தியுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், ஆளுநரைப் பேசினால், இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே, பொறுப்புணர்ந்து பேச வேண்டும். பாடுகிறவரிடம், `இந்த வரி பாடாதே…’ என யாராவது சொல்வார்களா?

ஹெச்.ராஜா

எப்போதும் பாடுகிறவர் அன்று வரவில்லை. புதிய நபர்களை பாடச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட தவறுதான். தமிழக அரசு எல்லை மீறுகிறது. முதல்வர் ஸ்டாலின் மகன் வெறுப்பு அரசியல் செய்கிறார்; மோசமாக பேசுகிறார். பண்பாடு இல்லாத இந்தக் கூட்டம் இந்து மதத்துக்கு எதிரானது. திராவிடம் என்பது இனத்தைக் குறிப்பது அல்ல, இடத்தை குறிப்பது. இவர்களே இவர்களுக்கான எதிரிகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். இவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்த 3 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளும் மிக மோசமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர்கள் மனநோயாளிகள். இந்த நேரத்தில், தமிழகத்தைக் காப்பாற்றிய வருண பகவானுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.