தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் புதூரில் அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் துரைமுருகன் துணைக்கு வர வேண்டும்,
கருணாநிதிக்கு துணையாக இருக்க வேண்டும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், இன்பநிதிக்கு துணையாக நிற்க வேண்டும். அமைச்சர் துரைமுருகன். வெட்கம், மானத்தை விட்டுவிட்டு துணை முதல்வர் பதவிக்கு என் பெயரை பரிந்துரை செய்யுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தார்.
ஆனால் ஒன்றும் பருப்பு வேகவில்லை. துணையாக இருப்பதற்கு மட்டும்தான் துரைமுருகன், துணை முதலமைச்சர் என்றால் அது உதயநிதிதான். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாடல். ஒரு விவசாயி முதலமைச்சராக சாதனையை படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைப்பது உறுதி .
இதே கடந்த கால பருவ மழை காலத்தில் பருவமழையை முறையாக கையாண்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான். தற்போதைய தி.மு.க அரசுக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தெரியவில்லை.” என்றார்.