ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று கலந்துகொண்ட தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது ஏற்பட்ட குழப்பத்தில், `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ வரி பாடாமல் விடப்பட்ட சம்பவம் பெரும் விவாதப்பொருளாக வெடித்தது. இந்த விவகாரத்தால், `தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த, `கவனக்குறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.’ என தூர்தர்ஷன் தமிழ் அறிக்கை வெளியிட்டது.
மறுபக்கம், முதல்வர் ஸ்டாலின் தனக்கெதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்வினையாற்றினார். இதைத்தொடர்ந்து, `முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா?’ என்பது உள்ளிட்ட பல கேள்விகளை ஸ்டாலின் முன்வைத்தார்.
இந்த விவகாரம் இவ்வாறாக விவாதப்பொருளாகச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன், “திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த்தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. அரசியல் செய்வதாக நினைத்து `திராவிட நல்திருநாடு’ எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும். எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88