தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன், ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று மாலை நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டங்கள் வந்தன.
மேலும், இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதினார். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தியைத் திணிப்பது ஏற்கக் கூடியது அல்ல என மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி, “ `எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். தொட்டதற்கெல்லாம் அவரைக் குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில், `எங்கெங்கு காணினும் இந்தியடா’ என்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். நாடு முழுவதும் இந்தி மாதம் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
இந்தக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று மாலை நடைபெறும் என்றும், அதில் தமிழக ஆளுநர் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியைத் திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல” என்று ட்வீட் செய்திருக்கிறார்.