Savings Account: உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

இன்றைய காலக்கட்டத்தில் வங்கி கணக்கு இல்லாமல் எவரும் இருக்க முடியாது. பண பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பெரிய சூப்பர் மார்கெட் முதல் சிறிய சாலையோர பூக்கடை வரை எங்கு போனாலும் கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதி்லேயே மக்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

எனவே நமது வங்கி கணக்கை பற்றிய முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையென்றால் பலவித சிக்கல்களை நாம் சந்திக்க நேரிடும்.

ஏனெனில் உங்கள் சேமிப்பு வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கும், ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்யலாம் என்பதற்கும் வருமான வரித்துறை வரம்பு வைத்துள்ளது.

உங்களுடைய வருமானம் வரி வரம்பை விட அதிகமாக இருந்தால், கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும். இது தவறும் பட்சத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும். இதை மட்டும் தான் வருமான வரித்துறை கண்காணிக்குமா என்றால்… இல்லை. நீங்கள் செய்யக்கூடிய பல்வேறு பணப் பரிமாற்றங்களையும் கண்காணிக்கிறது. இதில் நீங்கள் உங்கள் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யும் தொகையும் அடங்கும். இதற்கென ரிசர்வ் வங்கி ஒரு வரம்பையும் அமைத்துள்ளது.

சேமிப்புக் கணக்கிற்கான அதிகபட்ச பரிவர்த்தனை வரம்புகள் வங்கி மற்றும் கணக்கின் வகையைப் பொறுத்து மாறுபடும், ஆனால் சில பொதுவான வழிகாட்டுதல்கள் உள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘வங்கி’ அனுமதி?

நீங்கள் ஒரு ஆண்டில் ரூபாய் 10 லட்சம் வரை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். இதனால் வருமான வரித்துறையிடம் இருந்து எந்த பிரச்னையும் வராது ,இந்த அளவை தாண்டி நீங்கள் டெபாசிட் செய்தால் வங்கி அந்த தகவலை வருமான வரித்துறையினருக்கு அனுப்பும். அதன் பிறகு வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பும். இந்த பணத்திற்கு நீங்கள் வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஆனால் அந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்பதற்கான தகவலை நீங்கள் சொல்ல வேண்டும்.

உங்களால் டெபாசிட் செய்த பணம் எப்படி வந்தது என்று கூற முடியவில்லை என்றால் வருமான வரித்துறை அந்த பணத்தை அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து மீட்டு அந்த பணத்திற்கு வரி, அபராதம் உள்ளிட்டவையை விதிக்கும்.

இது தவிர ஒரு நாளில் உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்யலாம் என்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது. அதன் படி ஒரு நாளைக்கு உங்களால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிவர்த்தனை செய்ய முடியாது.

அதே போல் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்வதற்கு 50,000 ரூபாய் வரை பான் கார்டு அவசியம் இல்லை. 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு அவசியமாகிறது.

பணப்பரிமாற்றம் என்பது நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து withdraw செய்யும் பணம் மட்டுமில்லாமல். நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து மாற்றும் பணம்,வேறு ஒருவருக்கு வங்கி கணக்கு மூலம் நீங்கள் செலுத்தும் பணம்,உங்கள் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு நீங்கள் மாற்றும் பணமும் அடங்கும்.

மக்களாகிய நாம் தான் வங்கி பற்றிய முழு விழிப்புணர்வும் பெற்று இருக்க வேண்டும். இதனால் சைபர் கிரைம் போன்ற மோசடிகளில் இருந்தும் கணிசமான அளவில் தப்பிக்கலாம்.