Gaza: கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்; போரின் முடிவு நெருங்கிவிட்டதா… நெதன்யாகு என்ன சொல்கிறார்?

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், முதற்கட்ட டி.என்.ஏ டெஸ்டிங் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

யாஹ்யா சின்வார்தான் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தொடுத்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட நபர் என்கின்றனர்.

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டத்தை “தீமைக்கு பலத்த அடி” (Blow to Evil) எனக் கூறியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அதே வேளையில், ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

“படுகொலைகளுக்கும் அக்டோபர் 7-ல் நடந்த கொடுமைகளுக்கும் காரணமான கொலையாளி யாஹ்யா சின்வார் ஐடிஎஃப் வீரர்களால் கொல்லப்பட்டார்” என இஸ்ரேல் காட்ஸ் பேசியுள்ளார்.

Yahya Siwar

முன்னதாக இன்று(இஸ்ரேல் நேரப்படி 17.10.2024), காசாவில் நடந்த தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்த இஸ்ரேல் இராணுவம். தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தில் பணயக் கைதிகள் யாரும் இல்லை எனவும், இது மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட செயல்பாடு என்றும் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் தலைவர் கொலைக்காக இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக உளவுத்துறை அதிகாரிகள், சிறப்பு செயற்பாட்டாளர்கள், இராணுவ பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு நிபுணர்கள் மற்றும் பல அதிகாரிகள் உதவியுடன் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலம் ஹமாஸின் இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடுபவராக இருந்துவந்த யாஹ்யா சின்வார், ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு அவரது வாரிசாக கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Israeli Prime Minister Benjamin Netanyahu

ஹமாஸின் நிறுவனர் ஷேக் அஹமது யாசினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அல் மஜ்த் எனப்படும் உள் பாதுகாப்பு பிரிவின் தலைவராக பணியமர்த்தப்பட்டவர் யாஹ்யா சின்வார். இவர் இஸ்லாமிய அறநெறிச் சட்டங்களை மீறுபவர்கள் அல்லது இஸ்ரேலியப் படைகளுடன் ஒத்துழைப்பவர்களை வேட்டையாடும் பணியை மேற்கொண்டார்.

1988ம் ஆண்டு இஸ்ரேல் படையுடன் ஒத்துழைத்ததற்காக நான்கு பாலஸ்தீனியர்களை கொலை செய்த வழக்கில் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார் யாஹ்யா சின்வார். 20 ஆண்டுகள் சிறைவாசத்தில் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு பல முக்கிய பொறுப்புகளில் இருந்து ஹமாஸ் தலைவராகியுள்ளார்.

ஹமாஸ் மட்டுமல்லாமல் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக நிற்கும் அனைத்து அமைப்புகளின் தலைவர்கள், தளபதிகள் உள்ளிட்ட உச்ச அதிகாரம் கொண்டவர்களை கொலை செய்து வருகிறது இஸ்ரேல். இந்தவகையில் யாஹ்யா சின்வாரின் மரணம் குறிப்பிடத்தக்க வெற்றி என்றாலும், போரின் முடிவுக்கு அல்லது அமைதிக்கு இது பெரிய அளவில் உதவாது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்து.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs