தூர்தர்ஷன் தமிழ் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்வாறிருக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம் தற்போது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு தூர்தர்ஷன் தமிழ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன்விழா நிகழ்வில் கலந்துகொண்டு விழவைச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக ஒரு வரி தவறிவிட்டது. கவனக்குறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை. இந்த விஷயத்தில், ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தூர்தர்ஷன் தமிழ் குறிப்பிட்டிருக்கிறது.