`எங்கள் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்; திமுக-வில் யார் ஸ்டாலினா… உதயநிதியா?’ – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“மீண்டும் அதிமுக ஆட்சி மலர தடையாய் இருந்தவர்கள் இன்றைக்கு கட்சி வேட்டி கட்டமுடியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்…” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

அதிமுக-வின் 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயில் வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “அதிமுக-வின் 53-வது தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த காலத்தில் யானை பலம் கொண்ட கஜா புயலிலிருந்து மக்களையும், உடைமைகளையும் காக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்போது தாழ்வான பகுதியில் இருந்த 1.10 லட்சம் குடும்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தி முகாம்களில் தங்க வைத்தோம், அதேபோல் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களை பாதுகாத்தோம். அப்போது அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்து தேவையான ஆலோசனைகளை வழங்கி மக்கள் உயிரையும், உடமைகளையும் எடப்பாடி பழனிசாமி பாதுகாத்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்பு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, ஒருநாள் தாங்காது, நான்கு நாள் தங்காது என்று பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், நான்கரை ஆண்டு காலம் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் போற்றும் மகத்தான ஆட்சியை நடத்திக் காட்டினார்.

2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக மக்கள் விரும்பினார்கள். கூட்டணி கட்சிகளை சேர்த்து 75 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றோம், 43 தொகுதிகள் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கலாம், இந்த 43 தொகுதிகளிலும் மிகக் குறைவான வாக்குகளில் வெறும் 1,90,000 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நாம் நழுவ விட்டோம். இரண்டு லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தால் திமுக என்ற தீயசக்தி அழிந்து போயிருக்கும். அதில் சிலர் உள்குத்து, வெளிகுத்து வேலை செய்து விட்டனர். இனி அதிமுக-வில் அதற்கு வேலையே இல்லை, ஒரே குத்து இரட்டை இலைதான் என்று முடிவாகிவிட்டது.

அதிமுக கூட்டத்தில்

எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் வியூகத்தை வகுத்து விட்டார், தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக 234 தொகுதிகளிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது, இதில் தொண்டர்கள் எழுச்சி அடைந்து விட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் திமுக காய்ந்து போய் இருந்தது, தண்டுவடம் உடைந்து இருந்தவர்கள் தற்போது நிமிர்ந்துள்ளனர். இது நீடிக்காது.

அதிமுக-விற்கு யார் துரோகம் செய்தாலும் தப்பி பிழைத்தாக வரலாறு இல்லை, இயக்கத்திற்கு துரோகம் செய்தவர் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை, அவர்கள் நம்மிடம் இல்லை, இப்படிப்பட்ட துரோகிகளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா விட்டுவைக்காது.

மீண்டும் அதிமுக ஆட்சி மலர தடையாய் இருந்தவர்கள் இன்றைக்கு கட்சி வேட்டி கட்டமுடியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் தொண்டர்கள், மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று கூறியவர்கள், தற்போது சேருங்கள்… சேருங்கள் என்று கெஞ்சுகிறார்கள், இந்த நிலைமை அவருக்கு தேவையா? பாவம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

திமுக-வில் துணை முதலமைச்சர் பதவியை துரைமுருகன், பொன்முடி, நேரு என ஒரு பட்டியல் எதிர்பார்க்க, சமூக நீதி பேசிய ஸ்டாலின், இன்றைக்கு தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உட்கார வைத்து விட்டார்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்று எம்.ஜி.ஆர் கூறுவார், அதன்படியே எடப்பாடி பழனிசாமி இயக்கத்தை நடத்தி வருகிறார், இன்றைக்கு ஒரு சாதாரண கிளை கழகச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி கட்சியை வழி நடத்துகிறார். திமுக-வில் கருணாநிதி பிள்ளை ஸ்டாலின், பேரன் உதயநிதி ஆகியோர்தான் இடம்பெற்றுள்ளனர்.

ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 சதவிகித வாக்குகள் நமக்கு அதிகரித்து உள்ளது, குறிப்பாக இந்த தேர்தலில் தேசிய கட்சிகள் கூட்டணி இல்லை, பிரதமர் யார் என்று நாம் அறிவிக்கவில்லை, இருந்தாலும் மக்கள் நமக்கு கூடுதலாக 2 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர். ஆனால் திமுக 9 கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் 6 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார், ஆனால் திமுக-வில் ஸ்டாலினா? உதயநிதியா? துர்காவா ? என யாரை நிறுத்துவார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

இன்றைக்கு களைகளெல்லாம் களையப்பட்டுள்ளது. நான் எந்த தியாகத்தையும் செய்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை மலர செய்வேன் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்றுள்ளார், அவரை நாம் பின்பற்றி மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த கட்சியில்தான் நமக்கு அங்கீகாரம், மரியாதை எல்லாம் கிடைத்துள்ளது, நன்றியை நாம் மறக்கக் கூடாது. எத்தனை சோதனைகள், அவதூறுகள், நம் மீது சேற்றை வாரி இறைத்தாலும் அதை பற்றி கவலைப்படக் கூடாது” என்றார்.