“ரஜினியை ஆதரித்தவர்களின் நிலைதான் விஜய்யை நம்புவோருக்கும்” – சசிகாந்த் செந்தில் தடாலடி

“‘வேலைவாய்ப்பின்மை, தேர்தல் நியாயமாக நடக்கவில்லை’ என இந்தியாவிலிருக்கும் பிரச்னைகளை வெளிநாடுகளில் ராகுல் காந்தி பேசுவதால் நமது நாட்டின் மதிப்பு குறையாதா?”

“உலக அளவில் இந்தியாவுக்கு என ஒரு தகுதி இருந்தது. எடுத்துக்காட்டுக்கு எங்குச் சண்டை நடந்தாலும் அதைச் சமாதானம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் புகழ் குறைந்துவிட்டது. அதேநேரத்தில் உள்நாட்டுக்குள்ளும் பேச்சுரிமையைப் பறிப்பது, ஜனநாயக அமைப்புகளை வலுவிழக்கச் செய்வது என மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இதையெல்லாம் உலக நாடுகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவேதான் அரசியல் குறித்துப் படிக்கக்கூடிய இடங்களில் இந்திய ஜனநாயகம் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அப்போது அனைவருக்கும் அறிந்த உண்மையைத் தலைவர் ராகுல் காந்தி சொல்கிறார்.”

ராகுல் காந்தி

“ஆனால், நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின் மொழியில் ராகுலின் பேச்சு இருக்கிறது” என்கிறாரே நட்டா?”

“நான் ஏற்கெனவே சொன்னதுபோல அவர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டை வைத்து மணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்தினார்கள். மாட்டை வைத்து உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் அரசியல் செய்து வருகிறார்கள். இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும். ஆகவே பா.ஜ.க-வினர்தான் பிளவு வாதத்தின் மூலமாக அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். நாங்கள் அரசியலின் மூலமாக அன்பைத்தான் விதைத்து வருகிறோம். நாங்கள் உண்மையைப் பேசுவதால் பா.ஜ.க-வினருக்கு கோபம் வருகிறது”

நட்டா

“ஆனால், ‘அரசியல் ஆதாயத்திற்காக இளைஞர்களைக் காங்கிரஸ் போதையில் தள்ளியது’ எனப் பிரதமர் மோடி கடுமையாகப் பேசியிருக்கிறாரே?”

“குஜராத்தான் போதைப்பொருள் புழக்கத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அதானி துறைமுகத்தில் மட்டும் கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள துறைமுகங்களிலிருந்துதான் நாடுமுழுவதும் போதைப்பொருட்கள் செல்கின்றன. இளைஞர்களைப் போதை வசப்படுத்தி பிறகு வன்முறையில் பா.ஜ.க-வினர் இறங்குகிறார்கள். எனவே, பிரதமர் செய்வதைத்தான் காங்கிரஸ் செய்வதாகச் சொல்கிறார் என நினைக்கிறேன். அதானி துறைமுகத்தில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் எவ்வளவு போதைப்பொருள் பிடிக்கப்பட்டுள்ளது என்பதைக் கணக்கெடுத்தாலே உண்மை தெரிந்துவிடும்”

பிரதமர் நரேந்திர மோடி

“ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-யை நீங்கியதால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பா.ஜ.க 29 இடங்களை பிடித்திருக்கிறதே?”

“பிரிவு 370-யை நீக்கியதற்கு ஒரு இடத்தில் கூட மக்கள் ஆதரவு தரவில்லை. ஆனால் பா.ஜ.க-வினர்தான் அப்படி ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். அதற்குத் தேர்தலின் மூலம் மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். மேலும் பிரிவு 370-யை நீக்கியபோது தங்களது ஏற்றார்போல தொகுதிகளை சில இடங்களில் மாற்றியமைத்தார்கள். அதனால்தான் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இதை லடாக்கில் இருந்து மக்கள் டெல்லி நோக்கிவந்து போராட்டம் நடத்தியதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அவ்வளவு மோசமான நிலைக்கு ஜம்மு, காஷ்மீரைக் கொண்டு சென்றுவிட்டார்கள்.”

விவசாயிகள் போராட்டம்

“விவசாயிகள், குத்துச்சண்டை வீரர்கள் போராட்டம், அக்னிவீர் திட்டம் என பா.ஜ.க மீது பெரும் அதிருப்திகள் இருந்தபோதும் ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறதே?”

“நீங்கள் தெரிவித்ததுபோல பா.ஜ.க மீது பெரும் அதிருப்தி இருந்தது. ஜாட் சமூக வாக்குகளும் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என நம்பினோம். அது கிடைத்திருக்கிறது. அதேநேரத்தில் ஜாட் சமூகத்துக்கு எதிரான மற்ற சில சமூகத்தினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு கிடைத்திருக்கிறது. சுயேட்சைகளும் நிறையாக வாக்குகளை பிரிக்கிறார்கள். நாங்கள் சில இடங்களில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் தவறு நடந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ், பா.ஜ.க பெற்ற வாக்குகள் ஒரே அளவில்தான் இருக்கிறது. அதிகாரத்துக்கு வரவில்லை என்றாலும் காங்கிரஸ் எப்போதும் மக்களுடன் நிற்கும்”

ஹரியானா தேர்தல்

“மூன்று ஆண்டுகளில் தி.மு.க-வை ஒரு விஷயத்தில் கூட காங்கிரஸ் கண்டிக்கவில்லையே?”

“மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் அழுத்தமாகவும், தெளிவாகவும் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் பரபரப்பு அரசியல் செய்யவில்லை. எனவேதான் வெளியில் தெரியாமல் இருக்கிறது. காங்கிரஸ் பரபரப்பு அரசியல் செய்யாது”

முதல்வர் ஸ்டாலின்

“ஆனால் சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘தி.மு.க-வை எதிர்ப்பதில் வி.சி.க-வுக்கு இருக்கும் துணிச்சல் காங்கிரஸிடம் இல்லை’ என்கிற தொனியில் மாவட்ட தலைவர்களே வருத்தப்பட்டிருந்தார்களே?”

“இன்றைய காலகட்டத்தில் யூடியூப் போன்ற தளங்களில் யார் யாரை விமர்சனம் செய்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். மக்கள் பிரச்னைகளை எடுத்துப் பேச வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. மாநில தலைவர் அதைச் சரியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அதே கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றுகூடப் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு முதலில் கட்சியை வளர்க்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு அதில்தான் கவனம் செலுத்துவோம்”

சத்தியமூர்த்தி பவன்

“இப்படி எந்த விஷயத்திலும் குரல் கொடுக்காமலிருந்தால் எப்படி கட்சி வளரும்?. அதேநேரத்தில் விஜய் போன்றவர்களும் அரசியல் களத்துக்கு வருகிறார்கள். இதனால் இளைஞர்களிடத்தில் காங்கிரஸ் பக்கம் வருவதற்கான ஆர்வம் மேலும் குறையும்தானே?”

“விஜய் அரசியலில் என்னதான் இருக்கிறது என இதுவரை புலப்படவில்லை. எதை நோக்கிப் பயணிக்கிறார் என்கிற தெளிவு இல்லை. பிறகு எப்படி இளைஞர்கள் அவரது பின்னால் செல்வார்கள்?. ஒன்டைம் ஸ்டார் போலத்தான் இருக்கிறார். தீவிர அரசியல் போலத் தெரியவில்லை. இன்று சித்தாந்த சண்டை நடக்கிறது. எனவே சரியான நிலையை எடுக்கவில்லையென்றால் அரசியல் நிற்க முடியாது. ஆகவே சித்தாந்தத்தில் முதலில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். கட்சி ரீதியாக இன்னும் முன்னாள் செல்ல வேண்டும் என்பது உண்மைதான். பல முகங்கள் வர வேண்டும். அதற்கு நிறைய வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. இளைஞர்களுக்கான அரசியலைக் கொடுப்பது நாங்கள்தான். சித்தாந்தம் சரியாக இருக்கிறது. ஆனால் கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டும். அப்படிப் பலப்படும் போது வீரியம் வந்துவிடும்”

Vijay TVK – விஜய் த.வெ.க

“இதன் மூலமாக விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்கிறீர்களா?”

“அவரிடம் என்ன கொள்கை இருக்கிறது என்றே தெரியவில்லை. பிறகு எப்படி இளைஞர்கள் வருவார்கள். ஒருநாள் பதவிக்கு வந்துவிடுவார் என நினைப்பவர்கள் வேண்டுமானால் வரலாம். எதுகுறித்தாவது பேசியிருக்கிறாரா?. அந்த கட்சியின் கொடியிலிருந்து கூட ஒன்றும் தெரியவில்லை. பயங்கரமான குழப்ப நிலை இருக்கிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்த் இப்படித்தான் குழப்பம் செய்தார். அவர் பின்னால் சென்றவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோலவே விஜய் பின்னால் செல்பவர்களுக்கும் ஏற்படும்”

ரஜினி

“விஜய்யை விட்டுவிடலாம் தைரியமாக ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளியறிக்கை வெளியிட வேண்டும் எனப் பேசும் கார்த்தி சிதம்பரத்துக்குக் கூட கட்சியில் ஆதரவு இல்லையே?”

“அவர் கேட்பதும் காங்கிரஸின் குரல்தான். பலதரப்பட்ட விஷயங்களைப் பலர் கேட்போம். ஆனால் ஒற்றைக்குழல் துப்பாக்கியாக இருக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் குரல் கொடுப்பதற்கான அதிகாரத்தைக் காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதுடன், அதற்கான வேலைகளையும் தலைமை செய்யும்.

கார்த்தி சிதம்பரம்

“கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா, செந்தில் பாலாஜி ஜாமீன் உள்ளிட்ட விஷயங்களை மேற்கோள் காட்டி தி.மு.க, பா.ஜ.க இடையே உறவு இருக்கிறது’ என அ.தி.மு.க விமர்சனம் செய்கிறதே?”

“பா.ஜ.க-வுடன் யார் இணைந்தாலும் அவர்களின் அரசியல் தமிழகத்தில் நிற்காது. இதுதான் மக்களின் தீர்ப்பு. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பயந்துதான் ஆக வேண்டும். உண்மையாகக் கட்சி இல்லாமல் போக வேண்டும் என்றால் பா.ஜ.க-வுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம். பா.ஜ.க-வுடன் சேரும் அளவுக்கு மக்குகள் யாரும் இல்லை. ஒருவேளை பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க-வை மக்கள் புறக்கணிப்பார்கள். இது தி.மு.க-வுக்கும் தெரியும். எனவே அவர்கள் கொள்கையில் தெளிவாக இருக்கிறார்கள். நாங்களும் மிகவும் தெளிவாக இருக்கிறோம். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் பெரும் பாதிப்பு என்பதைத் தாமதமாகவே அ.தி.மு.க உணர்ந்திருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஒரு பொழுதுபோக்கு கட்சிதான். அதை மக்கள் ரசிக்கிறார்கள் “

கமலாலயம்

“முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக விமானப்படை சாகசத்தில் நடந்த உயிரிழப்புக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள்?”

“இது முழுக்க முழுக்க நிர்வாக தோல்விதான். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் மக்கள் வெளியில் செல்வதற்கான வழியைக் கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மக்கள் இவ்வளவுதான் கூடுவார்கள் என ஒரு வரையறை வைத்திருப்போம். ஆனால் அதைவிட அதிகமாகும் போது பிரச்சினைகள் ஏற்படும். எனவே இதை ஒரு படமாக எடுத்துக்கொள்ள வேண்டும்”

விமான சாகச நிகழ்ச்சி

“பா.ஜ.க-வில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்குத் தலைவர் பதவி கொடுத்தார்கள். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான உங்களுக்குத் தலைவர் பதவி கிடைக்கவில்லையே?”

“கட்சிக்கு 2021-ல்தான் வந்தேன். மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நடக்கும் தேர்தல்களை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல எம்.பி-யாக்கியிருக்கிறார்கள். எனக்கு எப்போது என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது தலைமைக்குத் தெரியும். தமிழக அரசியலில் மக்களோடு நிற்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். எப்போது மாநில தலைவர் பதவி கிடைக்கிறதோ, அப்போது அதைச் செய்வேன். இருப்பினும் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை சிறப்பாகச் செயல்படுகிறார்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk