கழுகார்: `பஞ்சமி நில மீட்பு… விசிக-வின் அடுத்த ஆயுதம் முதல் மாநாட்டை ரத்துசெய்த தலைமை வரை’

சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்கு, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அதன் தலைவர்கள் பலர் சென்று ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தனர். ஆனால், காங்கிரஸ் கமிட்டி சார்பில் மட்டும் மாநிலத் தலைவருக்கு பதிலாக, முன்னாள் தலைவர் தங்கபாலு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். ‘புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அகில இந்திய தலைமையிடம் கலந்தாலோசிக்க வேண்டியிருந்ததால், செல்வப்பெருந்தகை டெல்லிக்குச் சென்றுவிட்டார். அதனால்தான் அவருக்கு பதிலாக வேறொருவரை அனுப்பிவைத்திருக்கிறார்கள்’ என அப்போது காரணம் சொல்லப்பட்டது.

செல்வப்பெருந்தகை

ஆனால், அவர் டெல்லியிலிருந்து திரும்பிய பிறகும் இப்போது வரை போராட்டக் களத்துக்குச் செல்லவில்லை. இது குறித்து விசாரித்தால், “தலைவருக்கு நெருக்கமானவர்கள், தொகுதியில் இருக்கும் நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாலோ, அல்லது களத்துக்குச் சென்றாலோ அந்த ஒப்பந்தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாலேயே அவர் செல்லத் தயங்குகிறார்” என்கிறார்கள் சீனியர் கதர்கள்!

`அ.தி.மு.க செயலிழந்து கிடப்பதற்கு, முக்கிய நிர்வாகிகள் பலர் தி.மு.க முக்கியப் புள்ளிகள், அமைச்சர்களுடன் அண்ட் கோ போட்டிருப்பதுதான் காரணம்’ என்று எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள் சீனியர்கள் சிலர். உஷாரான எடப்பாடி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சிப் புள்ளிகளுடன் யார், யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று விசாரிக்கும்படி தனக்கு நம்பகமான போலீஸ் அதிகாரிகளிடம் சொல்லியிருந்தாராம். முதற்கட்டமாக, தென்மாவட்ட நிர்வாகிகள் தொடர்பான ரிப்போர்ட் எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதில், ‘இவர்களெல்லாம் ஆளும் தரப்பினர் மூலம் பல்வேறு அரசுப் பணிகளை எடுத்து ஆதாயமடைந்துவருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அதனால்தான், உள்ளூர் அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரையில் யாரையும் விமர்சனம் செய்யத் தயங்குகிறார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். கூடவே, ‘இந்த நிர்வாகிகளால் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை வெற்றிபெறவைக்க முடியாது’ என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறதாம். ‘இந்தப் பிரச்னையை எப்படிச் சரிசெய்வது எனத் தீவிர யோசனையில் இருக்கிறார் எடப்பாடி’ என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை சீனியர்கள்.

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாள்களில் மூன்று மாநாடுகள் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்ததை ரத்துசெய்திருக்கிறது பா.ம.க தலைமை. “வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால்தான் மாநாடு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது” எனக் காரணம் சொல்லப்பட்டாலும், “மாநாட்டுச் செலவுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளே பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தலைமை சொல்ல, அதை ஏற்க யாரும் தயாராக இல்லை.

தலைமை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் யாரும் செலவை ஏற்க முன்வரவில்லை. எனவேதான், மாநாடு அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்துசெய்ததோடு டிசம்பர் மாதம் நடத்திக்கொள்ளலாம் எனத் தலைமை முடிவெடுத்திருக்கிறது” என்கிறார்கள். ஆனாலும், “எப்போது நடத்தினாலும் செலவு விவகாரத்தில் தலைமை பாதியை ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் இந்த மாநாடு நடப்பது சிரமம்தான்” என்கிறார்கள் பாட்டாளி சீனியர்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக்குழுக் கூட்டத்தில், சாம்சங் ஊழியர்கள் போராட்டம் உட்பட 11 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். கூடவே, `வி.சி.க-வின் பல முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் உயர்நிலைக்குழு, `பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தகுதியானவர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியிருக்கிறது. அதற்கு அடுத்த நாளே, `பஞ்சமி நிலங்களையெல்லாம் கையகப்படுத்தவும், தகுதியான பட்டியலினத்தவர்களுக்கு அவற்றைப் பிரித்துக்கொடுக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்’ என பொதுச்செயலாளர் ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் நெருப்பைப் பற்றவைக்க, மதுவிலக்கு கோரிக்கையைப்போலவே இதையும் கையிலெடுத்துக் களமாடத் தொடங்கியிருக்கிறார்கள் சிறுத்தைகள். வி.சி.க-வின் இந்த ஆயுதத்தை எப்படி முனை மழுங்கச் செய்வது என்று இப்போதே சிந்திக்கத் தொடங்கிவிட்டதாம் ஆளுங்கட்சித் தரப்பு!

சென்னையில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கார்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாக நகரின் முக்கிய மேம்பாலங்களில் அவற்றை பார்க்கிங் செய்தனர். ஆனால், அப்படி நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தச் சொல்லி போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அபராதமும் விதித்தனர். “வீட்டில் பார்க்கிங் இல்லாத காரணத்தால் மட்டும் பாலத்தில் நிறுத்தவில்லை. பல தடவை முதல் மாடி வரைக்கும் தண்ணீர் வந்த ஊர் இது என்பதால்தான், பாலத்தில் நிறுத்தினோம்” என்று மக்கள் சமூக வலைதளங்களில் அரசை வசைபாடத் தொடங்கினர்.

இதைத் தொடந்து இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்ட ஆட்சி மேலிடம், போக்குவரத்து காவல் உச்ச அதிகாரியை அழைத்து செம டோஸ் விட்டிருக்கிறது. கூடவே, ஒவ்வொரு பகுதியிலும் வாகனங்களை நிறுத்த ஏதுவான இடங்களைத் தேர்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்தே, அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்ததோடு, ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதங்களை ரத்தும் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk