`சென்னையில் தொடங்கி 15,000 கி.மீ தூரம் சைக்கிள் பயணம்’ – இலங்கை ஆசிரியருக்கு மதுரையில் வரவேற்பு!

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியாவில் 15,000 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் பிரதாபன் தர்மலிங்கத்துக்கு மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதாபன் தர்மலிங்கம்

இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் பிரதாபன் தர்மலிங்கம். அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சுற்றுச்சூழலை காப்பதிலும் மரம் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பூமி வெப்பமாகிவருவதை தடுக்கவும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சைக்கிளில் 3000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் மீண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெண்களை வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கவும் வலியுறுத்தி 15,000 கிலோ மீட்டர் தூரத்தை 120 நாள்களில் சைக்கிளில் சுற்றிவர முடிவு செய்து, கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா வழியாக ராமேஸ்வரம் வந்தார்.

வரவேற்பு

ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வழியாக நேற்று மதுரை வந்தவருக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர், பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாரதி யுகேந்திரா அமைப்பின் நெல்லை பாலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய பிரதாபன் தர்மலிங்கம், “இந்த வரவேற்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இங்கிருந்து திண்டுக்கல் வழியாக கோவை சென்று அங்கிருந்து சென்னை சென்று 15,000 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்கிறேன்” என்றார்.