ADMK : 53 ஆண்டுகள்… `5′ முதல்வர்கள்; `உதயம் டு ஒற்றை தலைமை’ – அதிமுக-வும் 15 முக்கிய நிகழ்வுகளும்!

அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு விழா அந்தக் கட்சியினரால் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அ.தி.மு.க-வின் வரலாற்றில் முக்கியமான தருணங்கள் குறித்துப் பார்க்கலாம்:-

1972-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, சென்னை லாயிட்ஸ் ரோட்டிலும், திருக்கழுங்குன்றத்திலும் பொதுக்கூட்டம் நடந்தது. இரண்டு கூட்டங்களிலும், தி.மு.க-வில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், கட்சியின் வரவு செலவுக் கணக்கு கேட்டும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார் எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி, எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 14-ம் தேதி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எம்.ஜி.ஆர். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `உங்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்’ என்று சொல்ல, `எல்லாருக்கும் பாயசம் கொடுங்க’ என்பதே எம்.ஜி.ஆரின் பதிலாக இருந்தது.

எம்.ஜி.ஆர் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதியின் பொறுப்பாளரான அனகாபுத்தூர் ராமலிங்கம், அ.தி.மு.க என்கிற பெயரில் சொசைட்டி ஒன்றைப் பதிவு செய்துவைத்திருந்தார். அதில் சேரும் முடிவை அக்டோபர் 16-ம் தேதியே எடுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். அக்டோபர் 17-ம் தேதி அதை அதிகாரபூர்வமாகவும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சி உதயமானது.

திமுக – அதிமுக

1977-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றியும் பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க மட்டும் 130 இடங்களைப் பிடித்திருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.எம் 12 தொகுதிகளைப் பிடித்தது.

1987-ம் ஆண்டு டிசம்பர் 23 – ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு எம்.ஜி.ஆருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த எம்.ஜி.ஆருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் 1987 டிசம்பர் 24-ல் அதிகாலை 2.30 மணியளவில் எம்.ஜி.ஆர் உயிரிழந்தார்.

எம்.ஜி.ஆர்

தமிழர்களை நிலைகுலைய வைத்த எம்.ஜி.ஆரின் மரணம் கட்சியையும் ஒரு கலக்கத்துக்கு உள்ளாக்கியது. அதே நேரம் ஜெயலலிதா Vs ஜானகி அணி என இரண்டு அணிகளாக அ.தி.மு.க பிரிந்தது. அதற்கிடையில், கவர்னர் குரானாவின் அழைப்பை ஏற்று, முதல்வராக பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர்-ன் மனைவி ஜானகி. ஆனால் வெகுவேகமாக முடிவுக்கு வந்தது அந்த ஆட்சி. தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்ற ஜானகி, 24 நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்தார்.

எம்.ஜி.ஆர்-ன் மனைவி ஜானகி, கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்க சம்மதித்தார். அ.தி.மு.க முழுமையாக ஜெயலலிதா வசம் வந்தது. 1989-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை பிளவு பட்டிருந்த அ.தி.மு.க ஒன்றிணைந்து எதிர்கொண்டது. இதனால், 17.12 % வாக்குகளைப் பெற்று 11 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைந்ததற்கு பின்னர் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க 44.4% வாக்குகளைப் பெற்று 164 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஜானகி

2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27 அன்று, பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்தது. அதனால், அவருடைய முதலமைச்சர் பதவி பறிபோனது; அடுத்துவந்த மூன்று மாதங்களும், ஜெயலலிதா சிறையில் இருந்தார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நீதிமன்ற உத்தரவால் பதவி இழந்த சூழலில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவரது அமைதியான தோற்றம், பணிவு, செயல்பாட்டை அறிந்தே ஜெயலலிதா முதல்வர் பதவியை அளித்தார்.

ஜெயலலிதா, சசிகலா

2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, கட்சிக்குள் பிளவுக்கும் வழிவகுத்தது. ஆனால், கட்சியை சசிகலா கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கடந்த 1991 ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு இறுதி வரை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே இருந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதே ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் முதலமைச்சரும் ஆவார் என்று அப்போது கூறப்பட்டது.

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்ம யுத்தம்

2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ‘சசிகலாவை யாரும் முதல்வராக ஏற்கவில்லை. அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது’ என பல வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தர்மயுத்தம் தொடங்கினார். அதனால், ஆளுநரின் வருகை தாமதம், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என அடுத்தடுத்த திருப்பங்களால், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்தார் சசிகலா. அதனால், ஓ.பி.எஸ் அணி – இ.பி.எஸ் அணி என கட்சி இரண்டாக பிளந்தது. அப்போதுதான் அரசியலில் பேசுபொருளான கூவத்தூர் சம்பவமும் நடந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா சிறைக்குச் சென்ற சில மாதங்களில், முதல்வராக எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் என பதவிகளைப் பிரிந்துக்கொண்டு ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்தது.

பன்னீர் செல்வம் – எடப்பாடி

2017-ம் ஆண்டு, செப்டம்பர் 12-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும், டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்தும் நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர்கள் நீக்கப்பட்டனர்.

சசிகலா சிறையில் இருந்த நிலையில், டி.டி.வி தினகரன் தன் ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியதால் அப்போது அரசியல் களம் பரபரப்பானது.

எடப்பாடி பழனிசாமி

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-க்கு மத்தியில் அதிகாரப் போட்டி நிலவிய நிலையில், மிகப்பெரிய பிரச்னை எழுந்தது.., ஒரு கட்டத்தில், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய ஓ.பி.எஸ் ஒப்புக்கொள்ளாததால், அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். இப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk