‘தீவிரவாதம் தொடர்ந்தால் நட்பு இல்லை’ – பாகிஸ்தானில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

‘தீவிரவாதம் தொடர்ந்தால் நட்பு உருவாக வாய்ப்பில்லை’ என்று பாகிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ சந்திப்பில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

9 ஆண்டுகளுக்கு பிறகு…

9 ஆண்டுகளுக்குப் பிறகு…

இந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் தலைமையில் 23-வது எஸ்.சி.ஓ சந்திப்பு இன்று பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தான் சென்றது இதுவே முதல் முறை. இந்த நிலையில், ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு சென்றது மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

எஸ்.சி.ஓ என்றால்…

Shanghai Cooperation Organisation சுருக்கமே எஸ்.சி.ஓ. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 9 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

அண்டைய நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவு மற்றும் புரிதலை மேம்படுத்துவது தான் இந்த அமைப்பின் முக்கியம் நோக்கம். மேலும் தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றை தடுப்பதும் இந்த அமைப்பின் கொள்கை ஆகும்.

இவற்றை முன்னெடுக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளில் இந்த சந்திப்பு நிகழும். அதன் படி, இந்த ஆண்டு எஸ்.சி.ஓ-வின் சந்திப்பு பாகிஸ்தானில் நடந்தது.

இந்த சந்திப்பில் கலந்துக்கொள்வதற்காக, நேற்றே ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுவிட்டார்.

கடினமான வேளையில் சந்திப்பு

கடினமான வேளையில் சந்திப்பு

இன்று நடந்த சந்திப்பில் ஜெய்சங்கர், “உலகளவில் பல கடினமான விஷயங்கள் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில், நாம் அனைவரும் சந்தித்திருக்கிறோம்.

மேலும் வளர்ச்சியை பாதிக்கும் காலநிலை மாற்றம், நிலையற்ற பொருளாதாரம் போன்றவைகளையும் தற்போது இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த அமைப்பின் கொள்கையான நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, நம்பகத்தன்மை ஆகியவற்றை பலப்படுத்த வேண்டும்.

மிகப்பெரிய பலன்!

தற்போது உலகம் பல பரிமாணங்களில் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் உலகமயமாக்குதல் மற்றும் ரீ-பேலன்ஸை யாராலும் மறுக்க முடியாது. இவை வணிகம், முதலீடு, எனர்ஜி போன்ற பல துறைகளில் புதுப்புது வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அதனால், இவற்றை நாம் முன்னெடுத்துச் செல்லும்போது, நமது பிராந்தியம் மிகப்பெரிய அளவில் பலனடையும்” என்று பேசினார்.

வாய்ப்பில்லை…

வாய்ப்பில்லை…

ஜெய்சங்கர் தனது பேச்சில் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக, “வளர்ச்சிக்கு அமைதியும், நிலைதன்மையும் நிச்சயம் அவசியம். இவற்றை பெற, இந்த அமைப்பின் சாசனம் கூறுவதுப்போல ‘மூன்று தீமைகளை’ (தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம்) எதிர்க்க உறுதியாக இருக்க வேண்டும்.

எல்லை தாண்டிய தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வணிகம், இணைப்பு, நட்பு, மக்கள்களுக்கு இடையேயான தொடர்பு போன்றவை உருவாக வாய்ப்பே இல்லை” என்று சாடினார்.

பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சந்திப்பா?

ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே தனியாக எந்தவொரு சந்திப்பும் நிகழாது என்று அறிவித்துவிட்டது.

எஸ்.சி.ஓ சந்திப்பிற்கு பிறகு, இன்றே ஜெய்சங்கர் பாகிஸ்தானில் இருந்து கிளம்பிவிட்டார்.