அமெரிக்காவிடமிருந்து 4 பில்லியன் டாலருக்கு 31 டிரோன்கள் வாங்கும் இந்தியா… சிறப்பம்சங்கள் என்ன?

அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் பரபரப்பான சூழலில், நமது நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவிடமிருந்து 4 பில்லியன் டாலர் மதிப்பில் 31 டிரோன்கள் வாங்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, இரு நாட்டு அரசுகளும் 34,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன. பிரதமர் மோடி தலையில் கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து MQ-9B வகை டிரோன்களை வாங்க இந்தியா நேற்று ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டிருக்கிறது. இது குறித்து ஊடகத்திடம் பேசிய அதிகாரிகள், 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் டிரோன்கள் வாங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட ஒப்பந்த நிகழ்ச்சியில் ஜெனரல் அட்டாமிக்ஸ் குளோபல் கார்ப்பரேஷனின் (General Atomics Global Corporation) தலைமை நிர்வாகி விவேக் லால் கலந்துகொண்டார். மேலும், இந்த நிறுவனமானது இந்தியாவில் டிரோன்களுக்கான உலகளாவிய பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கும் உறுதியளித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், போர் டிரோன்களை உருவாக்குவதற்கான இந்திய திட்டத்திற்கான ஆலோசனை உதவியையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

இந்தியா வாங்கவிருக்கும் 31 MQ-9B டிரோன்களில் 15 டிரோன்கள் இந்திய கடற்படைக்கு, தலா 8 டிரோன்கள் விமானப்படை மற்றும் ராணுவத்துக்கும் ஒதுக்கப்படும். இந்த டிரோன்கள் சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இந்திய ராணுவத்துக்குப் பெரிதும் வலுசேர்க்கும் என்று கூறப்படுகிறது. MQ-9B டிரோன் ஆனது MQ-9 ரீப்பர் (Reaper)-ன் ஒரு வேரியன்ட் ஆகும்.

டிரோன்

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் காபூல் நகரில் அல்-கைய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி இந்த ரீப்பர் வகை டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டார். இந்த வகை டிரோன்கள் 35 மணி நேரத்துக்கும் மேலாக வானில் பறக்கும் திறன் கொண்டவை. இவற்றால், வானிலிருந்து தரை இலக்கைத் தாக்கக் கூடிய நான்கு ஹெல்ஃபயர் ஏவுகணைகள் (Hellfire missiles) மற்றும் சுமார் 450 கிலோ வெடிகுண்டுகளைச் சுமந்து செல்ல முடியும்.