Canada – India Row: `RSS அமைப்பை தடை செய்ய வேண்டும்!’ – கனட சீக்கிய தலைவர் ஜக்மீத் வலியுறுத்தல்

கனடாவின் குடியுரிமை பெற்ற `சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். `இந்தக் கொலையில், இந்திய உளவுத்துறைக்கு தொடர்பிருப்பதாக நம்பத் தகுந்த ஆதாரம் இருக்கிறது’ எனக் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். அப்போது தொடங்கி இந்திய – கனட நாடுகளுக்கு மத்தியிலான உறவு சிக்கல், இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், இரண்டு நாடுகளும் விசா வழங்க மறுத்தது தொடங்கி, சமீபத்தில் தங்கள் நாட்டிலிருந்த தூதர்களை மாறி மாறி திரும்பி அனுப்பியது வரை உறவு சிக்கல் நீடிக்கிறது.

ஜக்மீத் சிங் – ஜஸ்டின் ட்ரூடோ

இந்த நிலையில், இந்தியச் சிறையிலுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கேங் உடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள், கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக கனடா குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவரும், முன்னாள் கனட எம்.பி-யுமான ஜக்மீத் சிங் செய்தியாளர்களை சந்தித்த போது, “கனடா மண்ணில் கனடியர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை ஆதரிக்கலாம் என இந்திய அரசு எண்ணியதே அடிப்படை தவறு. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்தியாவிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்ததால், தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியா, திசை திருப்பும் அறிக்கைகளை வெளியிடுவதை விட்டுவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளோ, `ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, எதிர்வரும் தேர்தலில் தோல்வியடையும் நிலையில் இருக்கிறது. எனவேதான், கனடாவில் ஆதிக்கம் செலுத்தும் சீக்கியர்களை தனது வாக்கு வங்கியாக மாற்றிக்கொள்ள இப்படி அரசியல் நாடகமாடுகிறார். ஆனால், 2025 தேர்தலில் நிச்சயம் அவர் தோல்வியடைவார். பின்னர், இந்தியா – கனடா உறவு மீண்டும் மேம்படத் தொடங்கும்’ எனக் கூறிவருகிறார்கள்.

ஜக்மீத் சிங்

கனட அரசியலில் தலையிடும் இந்திய தூதர்கள் மீது கடுமையான தடைகளை கொண்டு வர வேண்டும். இந்தியாவை தளமாக கொண்டு, கனடாவிலும் பிற நாடுகளிலும் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ வெளியேற்ற வேண்டும். கனேடியர்களை கொல்வதற்கு இந்திய தூதர்கள் கிரிமினல் குழுக்களை பணியமர்த்துவதாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) கூறியுள்ளது. நாம் அனைவரும் கனேடியத் தலைவர்களாக ஒன்றிணைந்து, மோடியைக் கண்டிக்க வேண்டும். கனேடியர்களின் பாதுகாப்பை முதன்மையாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.