“நான் சாக மறுத்தபோது
என் சங்கிலிகள் தளர்த்தப்பட்டன
நான் வெளியே வந்தேன்
விசாலமான புல்வெளிகளுக்குள்
புல்லின் இலைகளைப் பார்த்துச் சிரித்தேன்
என் புன்னகையை அவர்களால்
சகித்துக்கொள்ள முடியவில்லை
நான் மீண்டும் கைதுசெய்யப்பட்டேன்.
மீண்டும், நான் சாக மறுத்தபோது
‘என்ன இவன் வாழ்க்கை’ எனச் சலித்துப்போய்
சிறையிலிருந்து என்னை விடுவித்தனர்
நான் வெளியே நடந்தேன்
பசுமையான பள்ளத்தாக்குகளுக்குள் உதயசூரியனின் கீழ்
அசைந்தாடும் புல்லின் கத்திகளைப் பார்த்துச் சிரித்தேன்
என் அழியாத புன்னகையால் கோபமடைந்து
அவர்கள் என்னை மீண்டும் கைது செய்தனர்
நான் இன்னும் பிடிவாதமாகச் சாக மறுத்தேன்
சோகமான விஷயம் என்னவென்றால்
என்னை எப்படிச் சாகடிப்பது
என்று அவர்களுக்குத் தெரியவில்லை
ஏனெனில் இப்போதும் நான் அந்த வளரும்
புல்லின் ஓசைகளை காதலிக்கிறேன் நான் சாக மறுத்தபோது
என் சங்கிலிகள் தளர்த்தப்பட்டன
நான் வெளியே வந்தேன்
விசாலமான புல்வெளிகளுக்குள்
புல்லின் இலைகளைப் பார்த்துச் சிரித்தேன்
என் புன்னகையை அவர்களால்
சகித்துக்கொள்ள முடியவில்லை
நான் மீண்டும் கைதுசெய்யப்பட்டேன்.
மீண்டும், நான் சாக மறுத்தபோது
‘என்ன இவன் வாழ்க்கை’ எனச் சலித்துப்போய்
சிறையிலிருந்து என்னை விடுவித்தனர்
நான் வெளியே நடந்தேன்
பசுமையான பள்ளத்தாக்குகளுக்குள் உதயசூரியனின் கீழ்
அசைந்தாடும் புல்லின் கத்திகளைப் பார்த்துச் சிரித்தேன்
என் அழியாத புன்னகையால் கோபமடைந்து
அவர்கள் என்னை மீண்டும் கைது செய்தனர்
நான் இன்னும் பிடிவாதமாகச் சாக மறுத்தேன்
சோகமான விஷயம் என்னவென்றால்
என்னை எப்படிச் சாகடிப்பது
என்று அவர்களுக்குத் தெரியவில்லை
ஏனெனில் இப்போதும் நான் அந்த வளரும்
புல்லின் ஓசைகளைக் காதலிக்கிறேன்
அதிகாரத்தின் அடக்குமுறையை எள்ளிநகையாடும் துணிச்சல் மிக்க இந்த கவிதை நாக்பூரிலுள்ள ‘அண்டா சிறை’ கம்பிகளுக்குப் பின்னால் எழுதப்பட்டவை. 90 ஆண்டு கால வரலாற்றில் கொடூர குற்றம் செய்தவர்களைத் தண்டிக்க திறக்கப்படாத அந்த சிறையின் பூட்டுகள், சக்கர நாற்காலியில் நகரும் ஒரு மாற்றுத்திறனாளிக்குத் திறக்கப்பட்டது. அதுவேறு யாருக்கும் அல்ல சமீபத்தில் மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜி.என் சாய்பாபாவுக்குத் தான். இடதுசாரி தோழர், மனித உரிமைகள் ஆர்வலர், பழங்குடி உரிமை போராளி, பேராசிரியர் எனப் பல அரசியல் முகங்கள் கொண்ட சாய்பாபா, ஏன் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்? எதற்காக இந்த தண்டனை..
ஜி.என் சாய்பாபா, ஆந்திரப் பிரதேசத்தில் கோதாவரி நதிக்கரையின் அமலாபுரம் பகுதியில் 1967-ம் ஆண்டு பிறந்தவர். 5 வயதில் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட அவருக்குத் தாயின் அரவணைப்பே எல்லாம். மிகவும் ஏழ்மையான விவசாய கூலிக் குடும்பத்தில் பிறந்த சாய்பாபா தனது இளமை நாட்களை விவரிக்கையில், ” நான் வளர்ந்த அந்த செழுமையான, வளமான எழில் கொஞ்சும் நிலங்களுக்கு அருகில் இருக்கும் கோதாவரி நதிக்கரையில் தலித் மக்களின் கண்ணீரும் கலந்திருக்கிறது. எங்கள் ஊரில் படித்த தலித்துகள் மட்டுமே சற்று தலை நிமிர்ந்து நடக்க முடிந்தது. மற்றவர்கள் கொடுமையான சாதிய அடக்குமுறையைச் சந்தித்தனர்” என்கிறார்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த சாய்பாபா வீட்டிலிருந்தே படித்தார். அவரை ஒன்றாம் வகுப்பு சேர்க்கச் செல்லும்போது பள்ளியின் தலைமையாசிரியர் இவரது அறிவுத்திறனைச் சோதித்தார். அதில் சாய்பாபா தந்த பதில்களால் பிரமித்துப் போனவர் ட்ரிப்ளில் ப்ரோமோஷன் கொடுத்து 4 வகுப்புக்கு நேரடியாகச் சேர்க்கை கொடுத்தார். பள்ளி நாட்களில் பெரிதாகச் சாதிய அடக்குமுறையைச் சந்திக்காத அவருக்கு உடலில் இருக்கும் பிரச்னையால் நிறைய கேலி கிண்டல்கள் வந்திருக்கின்றன. ஒரு நாள் பத்தாம் வகுப்பில் கணக்கு பரீட்சையில் தோற்பதுபோல் கனவு வர உடனே டியூஷன் சேரச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கே ஆசிரியரில்லை. மாறாக அங்கே வசந்தா என்பவரைச் சந்திக்கிறார். அவர் சாய்பாபாவின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார். இருவரும் பொதுத்தேர்வுக்கு ஒன்றாகப் பயிலத் தொடங்குகிறார்கள். கல்வியோடு சேர்ந்து காதலும் மலர்கிறது.
‘ஒரு காதல் என்ன செய்யும்’ என்ற வரிகளைப் போலப் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சாய்பாபாவைக் கல்லூரிக்குச் சேரும்படி வற்புறுத்திச் சேர்த்திருக்கிறார் வசந்தா. பல்கலைக்கழகத்திலே முதல் மாணவராக வந்த சாய்பாபா, தேசிய மெரிட் உதவித்தொகை மூலம் முதுநிலை படிப்பை முடித்தார். வசந்தாவின் காதல் வெறும் கல்வியை மட்டும் அவருக்குக் கொடுக்காமல் இடதுசாரி சிந்தனையாளர்களின் புத்தகங்கள், உலக இலக்கியங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தன. அந்த அழகிய காதல் திருமண உறவாக மாறியது.
2003-ம் ஆண்டு டெல்லியிலுள்ள ராம்லால் ஆனந்த் கல்லூரி (டெல்லி பல்கலைக்கழகம்) உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார் சாய்பாபா. கல்லூரி காலங்களில் மண்டல் ஆணையத்தின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தியிருந்தவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் இட ஒதுக்கீடுக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டி SC, ST மற்றும் OBC மாணவர்களுக்கு ஆதரவாகவும் போராடினார். மனித உரிமைகள் குறித்த அவரது இலட்சிய பணிகளுக்கு மனைவி வசந்தாவும் உதவினார். இருவரும் இணைத்து இந்தியா முழுவதும் பல கிராமங்களுக்குப் பயணித்து, ”தண்டகாரண்யா, பீகார், ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் விவசாய இயக்கங்களைப் போல உங்கள் கிராமத்திலும் இயக்கம் தேவை” என்று வலியுறுத்தினார்கள்.
1997-ம் ஆண்டு புரட்சிகர ஜனநாயக முன்னணியின் (RDF) துணைச் செயலாளராக இருந்த சாய்பாபா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் நடந்த அரச அடக்குமுறைக்கு எதிராக ‘அகில இந்திய மக்கள் எதிர்ப்புக் கூட்டமைப்பை’ முன்னின்று நடத்தினார். இந்த பிரசாரத்திற்காகப் பல மாநிலங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒற்றுமை நிகழ்ச்சிகளை நடத்தினார். 2009-ம் ஆண்டு ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ (Operation Green Hunt) என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் அரசாங்கம் நடத்திய துணை இராணுவ நடவடிக்கையைக் கண்டித்த சாய்பாபா, “‘Red Corridor’ என்று அழைக்கப்பட்ட (ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையேயான 5 மாநில பகுதிகள்) பகுதிகளில் , பழங்குடி மக்களின் குடிசைகளை எரிப்பது, கொலை செய்வது, பாலியல் வன்முறைகளைச் செய்வது எனக் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்” என்று துணை இராணுவப் படையின் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
“ஆளும் வர்க்கம் எப்படியாவது தொல்குடிகளின் வளங்களை அடைய நினைக்கிறது. அதற்கான போதுமான ஆதாரங்களை நான் சேகரித்து வைத்துள்ளேன். ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ பழங்குடிகளைக் கொல்ல, அவர்களது கனிம வளங்களைச் சுரண்ட, பூர்வ குடிகளைக் காடுகளை விட்டு வெளியேற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது” என்றார் சாய்பாபா. இதற்காக இந்தியாவில் இருக்கும் பல அறிவுஜீவிகளின் துணையோடு ‘மக்கள் போருக்கு எதிரான மன்றம்’ என்ற ஓர் அமைப்பினை நிறுவி ஒருங்கிணைத்தார். 2010 முதல் 2013 ஆண்டு வரை பழங்குடிகளுக்கு எதிராக நடந்த பல மனித உரிமை மீறல்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் மக்கள் பார்வைக்கு எடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் 2014-ம் ஆண்டு மே மாதம் சாய்பாபா உட்பட ஆறு நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு கொண்டதாக UAPA-வில் ( சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) கைது செய்யப்பட்டார்கள்.
அந்தக் கைது நடவடிக்கையில் அவரது சக்கர நாற்காலி உடைக்கப்பட்டது. இடதுகையைப் பிடித்து காவலர்கள் இழுத்துச் செல்ல கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையே இருக்கும் எலும்புகள் உடைந்தன. சிறையில் எந்த மருத்துவ உதவியும் கொடுக்கப்படாமல் 9 மாதங்கள் கடும் வலியால் அவதியுற்றிருக்கிறார். இதையடுத்து பம்பாய் நீதிமன்றம் தானே முன்வந்து சாய்பாபாவின் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, 2015-ம் ஆண்டில் அவருக்குத் தற்காலிக ஜாமீன் கொடுத்தது. ஆனால் அது அந்த வருடத்தின் இறுதியிலே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2016 -ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியது, ஆனால் 2017 ஆம் ஆண்டில், கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவரை UAPA வழக்கின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, வாழ்நாள் சிறைத் தண்டனையை வழங்கியது. நாக்பூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்லும் வேளையில் தொடர்ந்து 48 மணிநேரம் சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் கொடுமை செய்ததாகக் காவலர்கள் மீது புகார் சொல்லும் சாய்பாபா, ”அவர்கள் என்னை அடிக்கவில்லை ஆனால் உடல் அளவிலும் மனதளவிலும் என்னைப் பலவீனமாக்கினார்கள்” என்கிறார் . மேலும் சிறையில் ரேம்ப் வசதி இல்லாததால் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிரமப்பட்டுக்கொண்டு அழைத்துச் செல்லாமலே விட்டிருக்கிறார்கள். அவரோடு சிறையிலிருக்கும் சிறைவாசிகளின் உதவியாலே நாட்களைக் கடத்தியிருக்கிறார் சாய்பாபா. அங்கிருக்கும் பெரும்பாலோனோர் படிப்பறிவு இல்லாமல் இருக்க அவர்களுக்கு மனு எழுதித் தருவது, உறவினர்களைப் பார்க்க உதவுவது ஆகிய வகைகளில் சிறைவாசிகளுக்கு உதவி செய்திருக்கிறார்.
சிறைவாசத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொடிய குற்றம் சுமத்தப்பட்டவர்களை அடைக்கக்கூடிய “அண்டா செல்” என்று அழைக்கப்படக்கூடிய தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவச் சிகிச்சைக்காகப் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும் வலி நிவாரணி மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தாயின் மறைவுக்குச் செல்வதற்குக் கூட பரோல் மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் எழுத்தை வலி நிவாரணியாக மாற்றியதாகக் கூறும் சாய்பாபா, தன்னை காட்டிலும் சமூக அழுத்தத்தால் பசியின் கொடுமையால் தேவையின் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்ட சக சிறைவாசிகளின் துயரங்களைக் கவிதையாகக் கடிதங்களாக எழுதியிருக்கிறார். அது ‘Why do you fear my way so much? என்ற புத்தகமாக வெளிவந்தன.
இது கறுப்பின இலக்கியத்தில் முக்கிய எழுத்தாளரான நுகி வா திங்கோ ( கென்யா எழுத்தாளர் ) சாய்பாபாவின் எழுத்துக்களைப் பாராட்டி எழுதியது. நிறவெறியால் தங்கள் வளங்களைச் சுரண்டிய வெள்ளையர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய கறுப்பின மக்களின் இலக்கியத்தோடு சாய்பாபாவின் எழுத்துக்களை பொருத்திப் பார்ப்பதாக தனது கட்டுரையில் எழுதினார்.
சிறைத்தண்டனைக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தின் வழியாக ‘குற்றத்துக்கு போதிய ஆதாரம் இல்லை’ எனப் பம்பாய் உயர் நீதிமன்றம் அக்டோபர் 14, 2022 அன்று சாய்பாபாவை விடுதலை செய்தது. ஆனால், சனிக்கிழமைகளில் மிக அரிதாகக் கூடும் உச்ச நீதிமன்ற அமர்வை மிக அவசரமாக மறுநாளே கூட்டி விடுதலைக்குத் தடை உத்தரவு பெறப்பட்டது. கொடூர குற்றவாளிக்குக் கூட இப்படி ஒரு அவசர கூடுகை நடைபெறாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் அதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்துத் தாமதிக்கப்பட்ட நீதியாக ‘சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பகமானவை அல்ல’ என்று இறுதியாக மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு சாய்பாபா நாக்பூர் மத்தியச் சிறையிலிருந்து மார்ச் 7, 2024 அன்று நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் ஒரு பேட்டியில்,
என்று பேசியவர், தனது விடுதலைக்குப் பிறகு சிவில் உரிமைக்கு ஆதரவாகக் கொடூரமான சட்டங்களான TADA, POTA, UAPA, AFSPA போன்றவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பினார். மேலும் “இந்த தண்டனை சட்டங்கள் காங்கிரஸ், பாஜக என அனைத்து ஆட்சிக் காலத்திலுமே தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக UAPA (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. அது அதிகார துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கிறது. அந்த கொடூர சட்டங்களுக்கு முன்னால் ஜனநாயகத்துக்கு இடமில்லை” என்றார்.
10 ஆண்டு சிறைக்குப் பின்னர் ஹைதராபாத்தில் தனது மனைவி வசந்தா, மகள் மஞ்சீராவுடன் வசித்து வந்த சாய்பாபா, தீவிர இதயகோளாறு, பித்தப்பை அழற்சி, கணைய அழற்சி, ஸ்பைனல் ஸ்கோலியோசிஸ், சுற்றுப்பட்டைத் தசைகளின் கொழுப்புச் சிதைவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து தி வீக் இதழுக்கு அளித்த பேட்டியில்,
என்ற முக்கியமான கேள்வியை முன்வைத்திருந்தார். இதையடுத்து பித்தப்பை கற்களை நீக்கும் சிகிச்சைக்காக ஹைதராபாத்திலுள்ள நிஜாம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NIMS) அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் அக்டோபர் 12, 2024 அன்று காலமானார்.
பல மனித உரிமை ஆர்வலர்களும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 10 ஆண்டு கால சிறைக்கொடுமையே அவரது மரணத்துக்குக் காரணம் என்று குற்றம்சாட்டின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், ” ‘தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற முதுமொழியை நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற கருத்தினை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் இறந்த அவரது உடலினை அவரது இறுதி விருப்பத்துக்கு ஏற்ப தெலங்கானாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாகக் கொடுக்கப்பட்டது.
மறைந்தும் மாணவர்களின் கல்விக்குப் பயன்படும் அவரது வாழ்வு ‘என்னை எப்படிச் சாகடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை’ என்ற அவரது கவிதை வரிகளை ஞாபகப்படுத்துகிறது. யாருக்குத் தெரியும் அந்த கல்லூரியில் வளரும் புல்லின் ஓசையில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கலாம்…