கடந்த முறை சென்னை வெள்ளத்தை சந்தித்த போது, சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமானது. அப்போதே சிலர் பாதுகாப்பு காரணங்கள் கருதி கார்களை பாலங்கள் மீது நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில், தற்போது சென்னை வானிலை அறிக்கை கனமழைக்கு அலர்ட் கொடுத்திருக்கும் நிலையில், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் மீது கார் வைத்திருக்கும் பொதுமக்கள், வாகனங்களை நேற்று மாலைமுதல் வரிசையாக நிறுத்தத் தொடங்கினர்.
அப்போதே அந்த செய்தி வைரலானது. இதற்கிடையில், பாலத்தின் மீது நிறுத்திவைக்கப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. எனினும் கார்களின் விலை மற்றும் சேத மதிப்பீடுகளை ஒப்பிடுகையில் அபராதத்திற்கு அஞ்சாமல் கார்களை எடுக்க மறுப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் என்ற தகவலுக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மழைக்காலத்தில் மக்களுக்கு உதவ கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அருகே வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய மக்களுக்கு காவல் துறை உதவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமை என்றும் பொதுமக்கள் உதவிக்கு 9498181500 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.