முட்டுக்காட்டில் ரூ.487 கோடியில் அமையும் கலைஞர் பன்னாட்டு அரங்கம் – அவசியமும் பின்னணியும் என்ன?

சென்னை ஈ.சி.ஆரில் உள்ள முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியிருக்கிறது தமிழ்நாடு அரசு. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழா நினைவாக அமைக்கப்படவுள்ள இந்த அரங்கம் பல்வேறு அதிநவீன சிறப்பு வசதிகளை உள்ளடக்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

`கலைஞர் பன்னாட்டு அரங்கம்!’ – அறிவிப்பும் சிறப்பும்:

கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். உலகளவில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான `BEST IN CLASS’ Convention Center ஆக இது அமைய வேண்டும்” என்று நினைப்பதாகக் கூறினார்.

`கலைஞர் 100′ இலட்சினை

குறிப்பாக, “உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாக ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ அமைய வேண்டும் என எண்ணுகிறேன். இந்த எண்ணம் நான் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது எனக்கு ஏற்பட்டது. மிகப்பெரிய கன்வென்சன் சென்டர்கள் உலகின் பல நாடுகளில் இருப்பதுபோல தமிழ்நாட்டில், சென்னையில் இருக்கிறது; அதுவும் கலைஞர் பெயரால் இருக்கிறது என்பதுதான் மாபெரும் பெருமையாக இருக்கும். கன்வென்சன் சென்டர் போன்ற பயன்பாட்டுச் சின்னங்கள் கலைஞரின் புகழை நூற்றாண்டுகள் கடந்தும் உலகமெங்கும் எடுத்துச் செல்லும்” என்றார்.

என்னென்ன வசதிகள் இருக்கும்..?

மேலும், “ஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், கூடுதலாக கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் சுமார் 12 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அது இருந்தாலும், இது வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அமையவுள்ள இந்த ‘கலைஞர் கன்வென்சன் சென்டர்’ சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கி மிகப்பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப்படும் என்பதை பெருமையோடும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் பன்னாட்டு அரங்கம்

‘கலைஞர் கன்வென்சன் சென்டர்’ என்பது தமிழ்நாட்டு இளைய சக்தியை, அறிவு சக்தியை பூமிப்பந்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக அமையும். ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாகப் பயிற்சி பெற்று வரும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களுடைய, இளைஞர்களுடைய அறிவுக்குடியிருப்பாக ‘கலைஞர் கன்வென்சன் சென்டர்’ அமையுமானால் காலமெல்லாம் கருணாநிதி வாழ்வார்! அதுவே நம்மை ஆளாக்கிய தலைவருக்கு நாம் செய்யக்கூடிய சிறப்பான, உண்மையான புகழாக இருக்கும்” எனப் பெருமிதத்தோடு கூறியிருந்தார்.

ஆளவந்தார் அறக்கட்டளை நிலம்

நில சர்ச்சை… எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க:

அந்த நிலையில், பா.ம.க தலைவர் ராமதாஸ், “கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்க சென்னையிலும், சென்னைக்கு வெளியிலும் அரசுக்கு சொந்தமாக ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் பன்னாட்டு அரங்கத்தை கட்டுவதை விடுத்து ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக்கூடாது. செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னிய குலத்தில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைபணிக்காக வழங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம் என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்ற அமர்வு கடந்த 1918ம் ஆண்டு ஏப்ரல் 25ம் நாள் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது. கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் என்பது இறைபணியோ, கல்விப் பணியோ சார்ந்தது அல்ல. அதற்காக ஆளவந்தார் நிலங்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. முட்டுக் காடு கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” என எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின்:

அந்தநிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் `மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் பெய்துவந்த தொடர் மழை காரணமாக அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், பெரும் ஆவலுடன் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். அதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான், “பாதகமான வானிலை, தொடர் மழையின் காரணமாக, எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக, சட்டப்பூர்வ அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன், இசை நிகழ்ச்சியை வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. விரைவில் அதுகுறித்த தகவல் வெளியிடப்படும். மேலும், நமது அரசாங்கத்தின் உதவியுடன் கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மேம்பட்ட உள்கட்டமைப்பை நமது அரசு மூலம் நாம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன், அதற்காக பிரார்த்தனை செய்கிறேன்!” என்று கூறியிருந்தார்.

ஏ.ஆர் ரஹ்மான்

ஏ.ஆர். ரகுமானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் ஏ.ஆர். ரகுமான் பதிவிட்ட பதிவை மென்சன் செய்து, “இந்த நீண்ட நாள் ஆசையை சென்னை விரைவில் நிறைவேற்றும்! ஈ.சி.ஆரில் நிறுவப்படும் கலைஞர் கன்வென்சன் சென்டர் பெரிய அளவிவிலான கச்சேரிகள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கொண்டதாக இருக்கும். மேலும் இயற்கையை ரசிக்கும்படியான உணவு விடுதிகள்,ஹோட்டல்கள், பார்க்கிங் இடங்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். இது நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக இருக்கும்!” எனத் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து சென்னை ஈ.சி.ஆரில் செப்டம்பர் மாதம் நடந்த ஏ.ஆர். ரகுமானின் இசைக் கச்சேரி போதுமான வசதிகள் செய்யப்படாமலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியும் பெரும் அவப்பெயரை சந்தித்தது தனிக்கதை.

பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து டெண்டர் கோரல்:

இந்த நிலையில், 2024 பிப்ரவரியில் நடந்த தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, `ஈ.சி.ஆரில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆரில் உள்ள முட்டுக்காட்டில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் கோரியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

கலைஞர் பன்னாட்டு அரங்கம் டெண்டர் மதிப்பு

அதன்படி, ரூ.102 கோடியில் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடமும், ரூ.172 கோடியில் 10,000 நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கமும், ரூ.108 கோடியில் கூட்ட அரங்கமும், ரூ. 105 கோடியில் சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் ஆகிய வெளிப்புற பணிகளும் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இவைதவிர, திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகளும் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த கட்டுமானப் பணிகள் 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் முடிக்க பொதுப் பணித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs