Chennai Rain: தொடங்கியது கனமழை… இம்முறை பருவ மழையைத் தாங்குமா சென்னை?!

சென்னை வானிலை ஆய்வு மையம் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 4 தினங்களுக்கான அநேகமான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்வங்கக்கடல் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருக்கிறது. இது மேற்கு வடமேற்கு திசைகளில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

சென்னை மழை

இதன் காரணமாக வரும் 15-16-ம் தேதிகளில் தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்திருக்கிறது. ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை தயாரா?

ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் சென்னை படாத பாடுபடுவது வழக்கமான ஒன்றாகிப்போனது. இந்தமுறை கனமழை எச்சரிக்கை வந்ததுமே, சென்னை வாசிகள், வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்துவது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி குவிப்பது எனச் சென்னைவாசிகள் பரபரப்புடன் காணப்படுகிறார்கள். காய்கறி கடை, பால் விற்பனையகத்தில் பொருள்கள் எல்லாம் விற்றுப்போகும் அளவுக்குக் கூட்டம் அலைமோதுகிறது. இப்படி அலைமோதுவதற்குக் காரணம் இல்லாமல் ஒன்றுமில்லை, கடந்த வருடம் மழை வெள்ளத்தில் மக்கள் பட்ட துயரம் அப்படியானது.

உதயநிதி ஆய்வு

சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி தரப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தயாராக இருப்பதாகச் சொல்கிறது. “சென்னையில் உள்ள 33 கால்வாய்களும் தூர்வாரப்பட்டுவிட்டன. 765 கி.மீ நீள மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டிருக்கிறது. 990 மோட்டார் பம்புகள் மற்றும் 57 டிராக்டர்களோடு பொருத்தப்பட்ட கனரக பம்புகள், 21 சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்காமல் இருக்க மோட்டார், 69 நிவாரண மையங்களும், 35 பொது சமையலறை மையம், 15 மண்டலங்களிலும் படகுகள், 24X7 அவசரக்கால கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் தயாராக இருக்கிறது” என்று ஏற்பாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறது சென்னை மாநகராட்சி.

உதயநிதி நேரில் ஆய்வு!

துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளச் சென்னை தயாராக இருக்கிறதா என்றும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அடையாறு முகத்துவாரம், பக்கிம்கம் கால்வாய் முகத்துவாரம், கட்டுப்பட்டு மையம் எப்படிச் செயல்படுகிறது என்று அதிகாரிகள் படை சூழ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் . அதில், மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும், இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவும் பறந்திருக்கிறது.

முதல்வர் ஆய்வு கூட்டம்

துணை முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் தமிழகம் முழுவதும் பருவ மழைக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். மேலும், சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பட்டு அறைக்கு நேரில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர், துணை முதல்வர் ஆய்வு ஒருபக்கம் இருக்க, சென்னையில் மண்டல வாரியாக அமைச்சர்களும் ஆய்வுக் கூட்டம் நடத்திவருகிறார்கள். பெருமழை பெய்தாலும் தயாராக இருக்கிறது சென்னை என்று நம்பிக்கை தெரிவிக்கிறது அரசு.

உண்மை நிலவரம் என்ன?

அரசு தரப்பில் வழக்கமாகச் சொல்வதுபோலவே தயாராக இருக்கிறோம் என்கிறார்கள். உண்மையில் சென்னையின் நிலை என்ன என்பது குறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ, மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு சேதமடைந்திருக்கிறது. அதனை ஒருசில பகுதிகளில் சரி செய்திருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் கட்டமைப்புகள் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. அதேபோல, கிட்டத்தட்ட பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை இன்னும் தூர்வாரவும் இல்லை. சென்னையில் இருக்கும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு பத்து செ.மீ மழையை மட்டுமே தாங்கும்.

மழைநீர் வடிகால் பணிகள்

அதற்கு மேல், ஒரே நேரத்தில் அதி கனமழை பெய்தால் கண்டிப்பாக எந்த வடிகால் கட்டமைப்புகள் இருந்தாலும் அது தண்ணீரை உள்ளெடுக்காது. வழக்கமாக அதிக தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களில் ஒன்றுக்கு இரண்டு மோட்டார் பம்புகள் போடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் தேங்கத் தேங்க பம்புகள் வழியாகத் தண்ணீரை இறைத்து அருகில் உள்ள கால்வாய் வழியாக வெளியே அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த முறை நமக்கு இருக்கும் மிகப்பெரிய நல்ல விஷயமே, இப்போதுதான் மழை ஆரம்பிக்கிறது எனவே நிலமும் தண்ணீரை வாங்கும், சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. சென்னையில் ஓடும் நதிகள் தண்ணீரை நன்றாக உள்ளே வாங்கி வெளியே அனுப்பும். இவை அனைத்தும் இருந்தாலும், குறுகிய நேரத்தில் நாம் எதிர்பார்க்காத அளவுக்குப் பெருமழை பெய்தால் கண்டிப்பாக அது நமது கையிலும் இல்லை கட்டுப்பாட்டிலும் இல்லை” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs