`மாட்டுத் தொழுவத்தில் தூங்கினால் புற்றுநோய் குணமாகும்!’ – உ.பி பாஜக அமைச்சர்

மாட்டுக் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்றும், அதைப்பருகினால் நோய்கள் தீரும் என்றும் பாஜக அமைச்சர்கள் அவ்வப்போது கூறிய வண்ணமே இருக்கின்றனர்.

அந்த வரிசையில் உத்தரப்பிரதேச பா.ஜ.க அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் என்பவர், புற்றுநோயாளி ஒருவர் மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்து அங்கேயே படுத்துறங்கினால் புற்றுநோய் போய்விடும் என்று தெரிவித்திருக்கிறார்.

பசு

முன்னதாக, சஞ்சய் சிங் கங்வார் தனது தொகுதியான பிலிபிட்டில் உள்ள பகாடியா நௌகாவானில் பசுக்கள் காப்பகத்தை நேற்று திறந்துவைத்தார். அப்போது, அங்கு வந்திருந்த மக்களிடம் பேசிய சஞ்சய் சிங் கங்வார், “ரத்த அழுத்த நோயாளி ஒருவர், தினமும் காலை மலை பசுவின் பின்பகுதியில் வருடிக்கொடுத்தால், 20 மில்லி கிராம் ரத்த அழுத்த மருந்தை எடுத்துக்கொள்வது 10 நாள்களில் 10 மில்லி கிராமாகக் குறைந்துவிடும். இது ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டதுதான்.

உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார்

அதேபோல், புற்றுநோயாளி ஒருவர் இருக்கிறாரென்றால், அவர் மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்து அங்கேயே படுத்துறங்கத் தொடங்கினால் புற்றுநோய் கூட குணமாகும். மேலும், மாட்டுச் சாண வறட்டியை எரித்தால் கொசுத் தொல்லை நீங்கும். மாட்டிலிருந்து உருவாகும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கங்வார், மக்கள் தங்களின் திருமண நாள் மற்றும் குழந்தைகளின் பிறந்தநாளைப் பசுக் கூடங்களில் கொண்டாடுவதுடன், தானமாக தீவனம் போன்றவற்றை வழங்க வலியுறுத்தினார்.