Baba Siddique Murder: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து; உயிர் தோழன் படுகொலையால் வேதனையில் சல்மான் கான்!

மும்பையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். சிவகுமார் என்ற மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்டார். இப்படுகொலையால் நடிகர் சல்மான் கான் மிகவும் மனமுடைந்துவிட்டார். தன்னால்தான் பாபா சித்திக் கொலைசெய்யப்பட்டதாக சல்மான் கான் கருதுகிறார். சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். நடிகர் சல்மான் கானுக்கு பாபா சித்திக் மிகவும் நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்திற்காக லாரன்ஸ் பிஷ்னோய் கூலியாட்களை அனுப்பி பாபா சித்திக்கை கொலைசெய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஃ ஃபேஸ்புக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி சுபு லோன்கர் என்பவர், தாங்கள்தான் இக்கொலைக்குக் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சல்மான் கான் – பாபா சித்திக்

இதனால்தான் சல்மான் கான் மிகவும் வேதனை அடைந்துள்ளார். சல்மான் கானும், பாபா சித்திக்கும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். சல்மான் கான் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பாபா சித்திக்கும், அவரது மகனும் வந்து கலந்து கொள்வது வழக்கம். சல்மான் கான் வீட்டில் பாபா சித்திக்கை ஒரு குடும்ப நண்பராகவே பார்த்தனர். பாபா சித்திக் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்ற தகவல் கேட்டவுடன் சல்மான் கான் தனது பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனே ரத்து செய்துவிட்டு வேகமாக லீலாவதி மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தார். அன்று வீட்டிற்குச் சென்ற சல்மான் கான் இரவு முழுவதும் தூங்காமல் நடந்ததை நினைத்துக்கொண்டே இருந்தார்.

அதோடு அடுத்த சில நாள்களுக்கு தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். அதன் பிறகு பாபா சித்திக் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு அவரது இல்லத்திற்கு சென்று பாபா சித்திக் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தார். அதோடு பாபா சித்திக்கின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் குறித்து போன் மூலம் அடிக்கடி கேட்டு தெரிந்து கொண்டே இருந்தார்.

சல்மான் கான் குடும்பத்தில் அவரது சகோதரர்கள், சகோதரி, சல்மான் கானின் தோழி உட்பட அனைவரும் பாபா சித்திக் இல்லத்திற்குச் சென்று வந்தனர். சல்மான் கான் பாபா சித்திக் வீட்டிற்கு சென்றபோது கண்ணீர் சிந்தி அழுததாக கூறப்படுகிறது. பாபா சித்திக் இழப்பால் சல்மான் கானின் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.